சென்ற பிறவியில் செய்த நல்வினைகள் பயனாகக் கண்ணனுக்கு அடுத்த வீட்டில் இருக்கும் பாக்கியத்தை பெற்றவளாகக் கருதப்படும் தோழியை நோன்பு நோற்கும் பெண்டிர், துயிலிலிருந்து எழுப்பி அழைத்துச் செல்ல முனையும் பாசுரம் இது. இத்தகைய வாய்ப்பைப் பெற்றுள்ள பெண்ணே! உன் வீட்டு வாசலில் காத்திருக்கும் வேளைதனில் நீ கதவைத் திறக்காவிட்டாலும் பரவாயில்லை. எங்களை வரவேற்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் மறுமொழி கூடக்கொடுக்காமல் இருக்கிறாயே!
நறுமணம் வீசும் துளசியைத் தலையில் அணிந்த நாராயணனை வணங்கி, அவனைப் போற்றிப் பாடுவதைக் கருத்தில் கொண்டு நமக்கு அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். நாராயணன் ராமபிரானாக அவதரித்தபோது, அவனிடம் தோற்று கூற்றுவனின் வாயில் வீழ்ந்தான் கும்பகர்ணன். உன்னிடம் அவன் தோற்று, தான் வரமாகப் பெற்ற தூக்கத்தினை வரமாகத் தந்துவிட்டான் போலும்! அதனால்தான் விடிந்த பின்னரும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாய். எல்லையற்ற சோம்பலுடையவளே! கிடைத்தற்கரிய சூடாமணி அல்லவோ நீ, அல்லது மார்பிலணியும் ரத்தின ஹாரத்துக்கு நாயகக்கல் போன்றவளல்லவோ நீ ! என்று நகைச்சுவை கலந்து அதே நேரம் நோன்பு நோற்று தாங்கள் நினைத்ததை அடையும் நோக்கத்தோடு எழுந்து வா, கதவைத் திறந்து வெளியே வா,” என அழைக்கிறார்கள்.