புத்தாண்டில் தலையிடக்கூடாது

கும்பகோணம், டி.ஆர்.எம். அறக்கட்டளை சார்பாக திருத்தலங்களைத் தேடி என்ற நூல் வெளியிடும் விழா இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில அரசின் பாடலாக அறிவித்ததை வரவேற்கிறோம். தமிழ்தாய் வாழ்த்து பாடலை மனோன்மணியம் சுந்தரனார் எப்படி எழுதினாரோ அப்படியே இருக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான பாடல் இடம் பெறும். மேலும், தமிழ் புத்தாண்டு சித்திரை 1ம் தேதிதான் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆதின பரமாச்சாரியர்களின் வழியிலேயே சித்திரை 1ம் தேதியைதான் நாங்கள் தமிழ் புத்தாண்டாக கடைப்பிடிப்போம் என்றார். இது தொடர்பாக மூத்த பா.ஜ.க தலைவர் ஹெச். ராஜா தனது டுவிட்டர் பதிவில் ‘தமிழகத்திலுள்ள கிறித்தவர்கள், முஸ்லிம்களின் புத்தாண்டில் எப்படி அரசு தலையிடுவதில்லையோ, அதுபோல ஹிந்துக்களின் புத்தாண்டிலும் அரசு தலையிட எந்த அதிகாரமும் இல்லை. மதத் தலைவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவோம்’ என பதிவிட்டுள்ளார்.