உத்தர பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் வேகமெடுத்து உள்ளது. சமீபத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பேத்தி திருமணம் டில்லியில் நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 12 உறுப்பினர்களில் பலரும் இதில் அடக்கம். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உ.பி அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த புகைப்படத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங் யாதவும் ஒன்றாக அமர்ந்துள்ளனர். பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால், தன் பிறந்த நாளுக்கு மோகன் பாகவத்திடம் ஆசி பெற்றார். இயல்பாக நடைபெற்ற இந்த சந்திப்பு புகைப்படத்தை அர்ஜுன் மேக்வால் தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்தார். இதை பார்த்த உ.பி காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்., கொள்கையுடன் சமாஜ்வாதி உடன்படுகிறதா? என கேள்வி எழுப்பியது. பா.ஜ.கவும் ‘இந்த புகைப்படம் பல கருத்துக்களை கூறுகிறது’ என பதில் அளித்தது. இது குறித்து சமாஜ்வாதி கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘அந்த திருமண நிகழ்வில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களும் முலாயம் சிங்கிடம் ஆசி பெற்றனர். இதற்கு காங்கிரஸ் என்ன பதில் சொல்ல போகிறது? என, கேள்வி எழுப்பி உள்ளது.