கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோத மதமாற்றங்களைத் தடுக்க அம்மாநில அரசு மதமாற்றத் தடைச்சட்டத்தை கொண்டுவர தீர்மானித்தது. இதற்காக, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆராய்ந்து, சட்ட வரைவு உருவாக்கப்பட்டது. இதனை பரிசீலித்த கர்நாடக சட்டத்துறையும் உள்துறையும் இதற்கு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தன. இந்த சட்டத்தின்படி மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்க முடியும். இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை “இந்த சட்டத்தின் மூலம் கட்டாய மதமாற்றத்தில் இருந்து ஹிந்து மக்களை பாதுகாக்க முடியும். மதமாற்றத்தை கட்டுப்படுத்த முடியும். பெரும்பான்மை மக்களின் ஆதரவும் இதற்கு உண்டு. விரைவில் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படும்” என்றார்.