அதிகாலைப் பொழுதை பக்திபூர்வமாக ஆண்டாள் விவரிக்கும் பாங்கே தனி. ”தோழி, பொழுது விடிந்துவிட்டது. பறவைகளின் இனிய குரலோசை கேட்கவில்லையா? கருடனாகிய பறவையை வாகனமாகக் கொண்ட பகவானின் கோயில் கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன. அதை அறிவிப்பதுபோல், பெருத்த சப்தத்துடன் சங்கு ஒலிக்கிறது கேட்கவில்லையா? கோகுலத்தில் யசோதையின் வீட்டில் கண்ணன் வளர்வதைத் தெரிந்துகொண்ட கம்சன், கண்ணனை கொல்ல கோகுலத்துக்கு பூதனையை அனுப்புகிறன். யசோதையின் வீட்டில் படுத்திருந்த குழந்தை கண்ணனுக்கு தன், மார்பகங்களில் இருந்து நச்சுப் பாலை ஊட்டுகிறாள் பூதனை. .
அனைத்தும் அறிந்த கண்ணன் பாலை அருந்துவதாக அவளுடைய உயிரையே உறிஞ்சிவிடுகிறான். கம்சனின் ஆணைப்படி சகடாசூரன் சக்கரமாக மாறி கண்ணனைக் கொல்லச் செல்கிறான். சக்கர வடிவ அசுரனைத் தன் காலால் உதைத்து அழிக்கிறான். தீய வழியில் செல்லும் சக்கரத்தை பின்பற்றினால் நமக்குத் தீங்குதான் ஏற்படும். புலன்களை அடக்கி நல்ல வழியில் செலுத்தும் வல்லமை கண்ணனின் திருவடிகளுக்கே உண்டு. இவ்விரு லீலைகளைக் குறிப்பிட்டு தன் தோழியை எழுப்பும் ஆண்டாள், அந்தப் பொழுதில் பாற்கடலில் ஆதிசேஷ பாம்பணையில் அறிதுயில் கொண்டிருக்கும் பகவானை, முனிவர்களும் யோகியரும் ”ஹரி, ஹரி’ என்று துதிக்கும் பேரொலியானது உனக்குக் கேட்கவில்லையா? விரைவில் எழுந்து வா, மார்கழி நீராடி நாமும் அந்தப் பரமனைப் பணிவோம்,”என்று அழைக்கிறாள்.