நதிகளின் அழிவை தடுக்க வேண்டும்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திர சிங், பாரதத்தின் ‘தண்ணீர் மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காளிவேலம்பட்டி பிரிவில் வசிக்கும் பொதுமக்களை சந்தித்து பேசிய ராஜேந்திர சிங், ‘தமிழகத்தில் மலைகள், நதிகள், தொழில் வளம் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன. ஆனால், இந்த வளங்களை பாதுகாக்க மக்கள் மறந்துவிட்டனர். தமிழகத்தில் காவிரி, நொய்யல் உட்பட பல ஜீவநதிகள் மோசமான நிலையில் உள்ளன. எந்த நாட்டில் நீர்நிலைகள் மோசமான நிலையில் உள்ளதோ, அந்நாட்டில் மக்களின் வாழ்க்கைச் சூழலும் மோசமடையும். தமிழகத்தில் நீர்நிலைகளின் நிலையைக் கண்டறிந்து மேம்படுத்த வேண்டும். நீரை தேவைக்கேற்ப பயன்படுத்தவும், மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலைத் தண்ணீரை சுத்திகரிப்பு செய்தாலும் ஆறுகளில் கலக்க விடக்கூடாது. மறுசுழற்சி செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும். மணல் மாஃபியாக்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நீர்நிலைகளை காக்க வேண்டும். தவறான நீர் மேலாண்மையால் தமிழக நதிகள் அழிவுப் பாதையில் செல்கின்றன. இதைத் தடுக்க தமிழக ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும்’ என கூறினார்.