மாலறியா நான்முகனும் காணா மலையினை என தொடங்கும் திருவெம்பாவைப் பாசுரத்தில், மாந்தரின் அஞ்ஞானத்தைப் போக்கும் வகையில் இறைவனின் சிறப்பை தோழிகள் மூலமாக எடுத்துச் சொல்கிறார் மணிவாசகர்.
நறுமணத் திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை “நாம் அறிவோம்,” என நீ மிகச் சாதாரணமாகப் பேசுகிறாய்.
ஒன்று மட்டும் புரிந்து கொள்! நம்மால் மட்டுமல்ல… அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே பரமனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரிய சர்வேஸ்வரனை உணர்ச்சிப்பெருக்குடன் “சிவசிவ” என்று அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல், துயில் நீங்காது இருக்கிறாய். இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை? முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள்.
ஆர் கிருஷ்ணமூர்த்தி