கோவலரும் ஆய்ச்சியரும் வியப்பும் திகைப்புமுறச் செய்த மாயச்செயல்களை கண்ட நிலையைக் காட்டுவதுதான் மாயனை என்று கண்ணனைக் குறித்தது. மாயமாவது என்னென்ன? ஆய்ச்சியர் அறியாதவாறு தயிர், வெண்ணையைக் களவு கொண்டது, ஆய மகளிர் ஒருவர் ஒருவரை அறியாமல் அவர் தம் உள்ளத்தைக் களவு கொண்டது இவை போன்றவை.
பிறந்தது வடமதுரையில். எப்படி ஆயர் குலத்தில் தோன்றும்? மதுரையில் ஏற்றிய இந்த விளக்கின் பிரகாசம் ஆயர்பாடியில் சென்று ஒளிர்ந்தது. அதாவது பிறந்தபோது யாரும் அறியாதிருந்து ஆய்ப்பாடி வந்து நிகழ்த்திய அருட்செயல்களால் அனைவருக்கும் புலனாக நின்றது. தாயாகிய தேவகியின் வயிற்றை தனது பிறப்பால் விளங்க செய்தவன், ஆகிய பண்புகள் பொருந்திய கண்ணபிரானை நாம், தூய மனதினை உடையவர்களாக வந்து, தூய மலர்களைத் தூவி பகவான் கிருஷ்ணனுடைய புகழை வாய் மணக்கப் பாடி, அவனை மனதால் தியானித்தாலே போதும் நாம் செய்த பாவங்களும், இனி அறியாமல் செய்யப்போகும் பாவங்களும் தீயில் பட்ட பொருட்களைப் போல் பஸ்பமாகிவிடுமாம். இத்தனை எளிமையான வழியை எத்துணை அழகாகக் நமக்கு அழகாகக் காட்டிவிட்டாள் ஆண்டாள்?