நலமில்லா நலத்திட்டங்கள்

முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் பெரிதாக விளம்பரம் செய்து வழங்கிய நலத்திட்ட உதவிகள், வழங்கப்பட்ட ஒருசில நாட்களிலேயே தன் சுயரூபத்தை மக்களுக்கு காட்டிவிட்டது.

பட்டாவில் வில்லங்கம்

தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த நவம்பரில் மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் 54 பேர், இருளர் 27 பேர் என, 81 பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். பல ஆண்டுகளுக்கு முன், நரிக்குறவருக்கு கட்டிய, தொகுப்பு வீடுகளுக்கு இடையே உள்ள மிகக் குறுகிய பகுதியில் இவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அங்குதான் இவர்களுக்கு வீடுகள் கட்டப்பட உள்ளன. பயனாளிகள், சொந்தமாகவோ அல்லது கூடுதல் தொகையை வழங்கியோ வீட்டை கட்டலாம் என, ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அங்கு ஏற்கனவே வசிக்கும் நரிக்குறவர்கள், எங்கள் வீடுகளுக்கு இடையே உள்ள அந்த இடத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம். அங்கு புதிய வீடுகள் கட்டக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். இலவச மனைப்பட்டா பெற்றவர்கள், ‘எங்களுக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும். முதல்வரே நேரடியாக பட்டா வழங்கியதால் எல்லாம் சரியாக இருக்கும் என நினைத்தோம். இப்படி இருக்கும் என தெரிந்திருந்தால் அப்போதே மறுத்திருப்போம்’ என்று கூறியுள்ளனர்.

திரும்பிய செக்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், 400க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினருக்கு 105 கோடி ரூபாய் மதிப்பில் சுழல் நிதி கடன் உதவிக்கான வங்கி காசோலைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். ஆனால், அதற்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என்பதால், இவை வெற்றுக் காசோலைகளாக திரும்பிவிட்டன. ‘முதல்வர் வருகையால் சம்பிரதாயத்திற்காக ‘செக்’ வழங்கினோம், நிதி ஒதுக்கவில்லை, அதிகாரிகளிடம் காசோலையை திருப்பி கொடுத்து விடுங்கள்’ என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (இது, சட்டப்படி கிரிமினல் குற்றம் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சுய உதவிக் குழுக்கள் ரிசர்வ் வங்கியில் புகாரளித்து நடவடிக்கை எடுக்க முடியும், இழப்பீடும் பெற முடியும் என்பது வேறு விஷயம்).

தி.மு.க அட்சியில் அவர்கள் அறிவிக்கும் மக்கள் நலத் திட்டங்கள், உதவிகள், அரசின் செயல்பாடுகள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மையில் மக்களுக்கு பயன்படுகிறது, அதன் உண்மைத்தன்மை என்ன என்பதற்கு இவை நல்ல உதாரணம். தாங்கள் அறிவிக்கும் திட்டங்கள் எல்லாம் இப்படி பல் இளித்துவிடும் என்பதால்தானோ என்னவோ, தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களையும் முந்தைய அ.தி.மு.க அரசின் திட்டங்களையும் தன் திட்டங்களாக காட்டி ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது தி.மு.க அரசு.

மதிமுகன்