தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநிலப் பாடலாக அங்கீகரித்தது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையில், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநிலப் பாடலாக அங்கீகரித்து அறிவித்துள்ளது. பா.ஜ.க, தமிழ்த்தாய் வாழ்த்திற்கான அரசின் அங்கீகாரத்தை வரவேற்கிறது. தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த’’ என்னும் பாடல் பாடப்பட வேண்டும் என்னும் கோரிக்கை 1913ம் ஆண்டில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தீர்மானமாக இடம்பெற்றது. அனைத்து தமிழ்சங்கங்களிலும் பாடப்பட்டது. ஆனால் அப்பாடல் முழுமையான பாடலாக இருந்தது. இதனைத் தமிழக அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் அண்ணாதுரைக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. இதனை 1970ல் அன்றைய முதல்வர் கருணாநிதி, தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணை வெளியிட்டார். அப்போதே அப்பாடலை முழுமையாகப் பயன்படுத்தாமல் சில வரிகளைத் தவிர்த்தது சர்சையானது. மனோன்மணியம் சுந்தரனார் அன்று இருந்திருந்தால், அங்கீகாரத்தை நினைத்து மகிழ்ந்திருப்பார். ஆனால் முழுமையாகப் பயன்படுத்தாமல், அதில் சில வரிகளை நீக்கி, திருத்திப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொண்டிருக்கவே மாட்டார். எனவே, தமிழக முதலமைச்சர் தான் பதவி ஏற்ற போது எடுத்துக் கொண்ட,”என் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் செயலாற்றுவேன்” என்ற உறுதி மொழியின்படி, கடவுள் நம்பிக்கை வரிகளைச் சிதைக்காமல், முழுமையாகப் பாடலைப் பயன்படுத்துவதே, தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும், தமிழ் மொழிக்கும், பாடுபட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கும் பெருமை சேர்ப்பதாக அமையும்” என கூறியுள்ளார்.