உத்தர பிரதேசம் வாரணாசியில் தேசம் முழுவதிலும் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். இதனால் அங்கு யாசகம் பெற்று வாழவும் நாட்டின் பல பகுதிகளிலில் இருந்தும் யாசகர்கள் அங்கு செல்வது வழக்கம். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அங்கு ‘பெக்கர்ஸ் கார்ப்பரேஷன் அண்ட் காமன் மேன் டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனம் கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் சந்திர மிஸ்ரா, யாசகர்களை தொழில் முனைவோராக மாற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக, அங்கு தற்போது 12 குடும்பங்களை சேர்ந்த 55 பேர் சுய உதவிக் குழுக்களை அமைத்து தொழில் முனைவோராக மாறியுள்ளனர். இவர்கள் தயாரிக்கும் மடிக்கணினி பைகள், பள்ளி, கல்லூரி பைகள், நட்சத்திர ஓட்டல்களுக்கான பைகள், அழகிய துணி விரிப்புகள் அந்த மாநிலம் முழுவதும் விற்பனையாகின்றன. டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க தேசிய செயற்குழுக் கூட்டத்துக்கும் பல நூறு பைகளை இவர்கள் விநியோகித்துள்ளனர். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனின் 2017 புள்ளிவிவரத்தின்படி 85,000 பேருடன் மேற்குவங்க மாநிலம் யாசகம் பெறுவோர் அதிகமாக உள்ள மாநிலங்களில் முதலில் உள்ளது. 65,835 பேருடன் அடுத்த இடத்தில் உத்தர பிரதேசம் உள்ளது. இதில், வாரணாசியில் மட்டுமே 12,000 பேர் வசிக்கின்றனர். அவர்களில் 6,000 பேர் நல்ல உடல்நிலையில் உள்ளவர்கள். இவர்களை தொழில் முனைவோராக, உழைப்பவர்களாக மாற்றுவதுடன் இவர்களின் அடுத்த தலைமுறைகளுக்கும் மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் சந்திர மிஸ்ரா.