கேரள மாநிலம், கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கோபிநாத் சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஆனால் பல்கலைக்கழக சட்டத்தை மீறி மீண்டும் அவரையே மீண்டும் துணைவேந்தராக நியமித்தது கேரள அரசு. இது அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான கோப்பில் கையெழுத்திட கேரள அரசு, ஆளுனரை நிர்பந்தித்துள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுனர் ஆரிப் முகம்மது கான், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், கண்ணூர் பல்கலைக் கழகம், காலடி சமஸ்கிருத பல்கலைக் கழகம், கேரள கலா மண்டலம் ஸ்ரீ நாராயணகுரு திறந்தவெளி பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடுகளை பட்டியலிட்டுள்ளார். மேலும், ‘பலகலைக் கழக செயல்பாடுகளில் அரசியல் தலையீடு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனது வேந்தர் பதவியை அவசர சட்டம் மூலம் முதல்வரே எடுத்துக் கொள்ளலாம். அல்லது நானாகவே வேந்தர் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு கேரள பா.ஜ,க மாநில தலைவர் சுரேந்திரன், காங்கிரஸ் தலைவர் சுதாகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துன்ளனர்.