காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான இக்கோயில் வளாகம், பாரதத்தின் பழமையான தர்மத்தை மீட்டெடுக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா அழைப்பிதழில், காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை மீண்டும் நிறுவவும், காசியின் உண்மையான உணர்வைத் தக்கவைக்கவும் பிரதமர் மோடி காட்டிய ஈடுபாடு, ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை அழித்து ஞானவாபி மசூதியைக் கட்டியது, காசி விஸ்வநாதரை அதன் புராதனப் பெருமைக்கு மீட்டெடுக்க நடந்த போராட்டங்கள், மகாராஜா ரஞ்சித் சிங் கோயிலின் கோபுரத்திற்கு தங்க கவசம் அணிவித்தது, மகாராணி அஹல்யாபாய் ஹோல்கர் கோயில் வளாகத்தை புனரமைத்தது உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. 500 துறவிகள் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர், 2,500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொள்கின்றனர். சிவனின் நகரமான வாரணாசியும் அருகிலுள்ள கிராமங்கள் முழுவதும் விளக்குகளின் அலங்காரத்துடன் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. நாளை முதல் 3 நாட்கள் நடைபெறவுள்ள சிவ தீபத் திருவிழாவுக்கான ஆயத்தப் பணிகளில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.