அரசியல் சாஸன தின விழாவில் (நவம்பர் 26) குடும்ப அரசியல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு, ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம், “மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பா.ஜ.க.வுக்கு எந்தப் பங்கும் இல்லை. சுதந்திரத்துக்காக போராடியவர்கள் அனைவரும் காங்கிரஸைச் சார்ந்தவர்களே. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் தியாகத்தை மக்களின் நினைவிலிருந்து அழித்து, வரலாற்றை மாற்ற பா.ஜ.க. முயற்சித்து வருகிறது” என்று ’பதில்’ சொன்னார்.
சுதந்திரம் பெற்றது முதல் 2014 வரை ஜனநாயகம் வலுவடைந்தது, அதன் காரணமாகவே மோடி பிரதமரானார் என்றும் கூறி ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியுள்ளார். உண்மையில் நேருவின் சர்வாதிகார மனப்பான்மையே பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் கோலோச்சியது.
1950-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது. புருஷோத்தம்தாஸ் டண்டன் வெற்றி பெற்றார். இவரது வெற்றி நேருவுக்கு பிடிக்கவில்லை.தனது சூழ்ச்சியின் வழியாக தாண்டனை ராஜினாமா செய்ய வைத்தவர் நேரு. (’இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு’; ராமச்சந்திர குஹா; பக்கம் 210 )
1946-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் நதந்த்து என்ன? அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யும் அதிகாரம் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளுக்கு மட்டுமே உண்டு. 1946 ஏப்ரல் 29 வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்; 9 நாட்களுக்கு முன் காந்தி நேரு தான் வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை குறிப்பிட்டார். பெரும்பாலான பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் ப்டேல் பெயரையே பரிந்துரைத்தன; ஆனால் காந்தியின் விருப்பத்தின் பேரில் படேல் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதுதான் ஜனநாயகமா, சர்மாஜி? ஒரு பிரதேச காங்கிரஸ் கமிட்டி கூட பரிந்துரை செய்யாத போது, தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டவர் நேரு. இது தான் காங்கிரஸ் ஜனநாயகம் போலும்! (Nehru”s 97 Major Blunders; page-16)
காஷ்மீர் விவகாரத்தில் மந்திரி சபையின் ஆலோசனை இல்லாமலே, தன்னிச்சையாக செயலாற்றியவர் நேரு. ஒரு ஜனநாயகவாதி எந்த பிரச்சினையானாலும் மந்திரி சபையில் விவாதிக்க வேண்டும் என்ற ஜனநாயக நெறி கூட தெரியாமல் விளையாடினார். உள்துறை அமைச்சர் சர்தார் படேல் டி.பி.மிஸ்ராவுக்கு எழுதிய கடிதத்தில், “அவர் (நேரு) சமீபத்தில் பல விஷயங்களைச் செய்தார். அது எங்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. காஷ்மீரில் அவரது செயல்கள் உணர்ச்சிப் பித்தான செயலாகும். மேலும் இந்த விஷயங்களை சரி செய்வதற்கு நம் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது” என குறிப்பிட்டார்.
அரசியல் சாஸனத்திற்கு நேரு கொடுத்த மரியாதை எப்படி? ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் நேரு உறுதியாக இருந்தார். இந்தப் பின்னணியில், 1952 ஜூன் 26, ஆகஸ்ட் 7 தேதிகளில் லோக்சபாவில் 370வது பிரிவு மீண்டும் விவாதிக்கப்பட்டது. லோக்சபாவில் பேசும் போது, நேருஜி “உங்கள் அரசியல் சாஸனம் என்ன சொல்கிறது என்பது முக்கியமல்ல. காஷ்மீர் மக்கள் விரும்பவில்லை என்றால், அது அங்கு செல்லாது” என வெளிப்படையாக கூறியவர் ஜனநாயக காவலரா, சர்மாஜி?
அரசியல் சாஸன ஷரத்து 370 கொண்டு வரும் முன் நடந்த சம்பவம் இது: அரசியல் அரசியல் சாஸன வரைவுக் குழுவின் தலைவராக இருந்த பி. ஆர். அம்பேத்கரிடம் கலந்து ஆலோசிக்குமாறு ஷேக் அப்துல்லாவை நேரு அறிவுறுத்தினார். அம்பேத்கர், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அப்துல்லாவுடனான கருத்துக்கு உடன்படவில்லை. அதைத் தொடர்ந்து, பிரிவு 370 ஐ உருவாக்கும் பொறுப்பை தனது அமைச்சரவையில் உறுப்பினரான என். கோபாலஸ்வாமி ஐயங்காருக்கு வழங்க நேரு முடிவு செய்தார். நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும் போது, நேரு வெளிநாட்டிற்கு ஏன் பயணமானார் என்பதற்கு காங்கிரஸ் கட்சி என்ன விளக்கம் கொடுக்க போகிறது, சர்மாஜி?
நேருவின் அணுகு முறையால் கோபமடைந்த ராஜேந்திர பிரசாத் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் ’நீங்கள் அநீதியானவர், ஜனநாயகமற்றவர்’ என்று குறிப்பிட்டுள்ளார். நேருவுக்கு கடிதத்தை அனுப்பும் முன் சர்தார் வல்லபாய் படேலிடம் பகிர்ந்து கொண்டார். கடிதத்தின் மீது கோபமாக செயல்பட வேண்டும் என்று பிரசாத்திடம் படேல் பரிந்துரைத்தார். இந்த கடிதம் நேருவின் ஜனநாயகத்தை விண்டு வைக்கிறது. இதையா தலையில் தூக்கி வைத்துக் கொள்கிறீர்கள், சர்மாஜி?
1969-ல் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து வி.வி.கிரிக்கு மனசாட்சிப்படி ஓட்டளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு கட்டளையிட்ட இந்திரா காந்திதான் ஜனநாயகவாதியா, சர்மாஜி?
அதே இந்திரா, 1971-ல் “நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் வி.வி கிரியிடம் கேட்டுக் கொண்டார். இதை ஏற்க மறுத்த வி.வி.கிரி, “அமைச்சரவை கூடி உங்கள் ஆலோசனையை விவாதித்ததா? அப்படி என்றால் அமைச்சரவையின் பரிந்துரை எங்கே?” என திருப்பி கேட்டார். இதன் காரணமாகத்தான் அமைச்சரவை கூடி வி.வி.கிரிக்கு பரிந்துரை செய்தது. எப்பேர்ப்பட்ட ஜனநாயகவாதி உங்கள் இந்திரா!
அவசர நிலை பிரகடனம், எந்த விவாதமும் நடத்தாமல் சர்வாதிகாரியாகிட நேருவின் புதல்வி இந்திரா காந்தி கொண்டு வந்தது. 1975 ஜூனில் அவரது தேர்தல் வெற்றியை நிராகரித்து அவர் தேர்தலில் போட்டியிட ஆறு வருடம் தடை விதித்தது நீதிமன்றம். ஆனால் அவரை மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை. இந்திரா காந்தி ஜனாதிபதி ஃபக்ரூதின் அலி அகமதுவுக்கு அவசரகால நடவடிக்கையை அறிவிக்க அறிவுறுத்தினார். இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியான எமர்ஜென்சி எனப்படும் அவசரகால நடவடிக்கை 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை 21 மாதங்கள் நீடித்தது. இதனால் தேர்தல் உள்ளிட்ட அனைத்து மக்கள் உரிமைகளும் தடுத்து நிறுத்தப்பட்டன. அவசர காலத்தின் போது பத்திரிகைகள் தகவல், ஒளிப்பரப்பு அமைச்சகத்தால் தணிக்கை செய்யப்பட்டன. இதனால் அரசிற்கு எதிராக யாராலும் குரல் எழுப்ப முடியவில்லை. இந்த சர்வாதிகாரியைத்தான் ஜனநாயகவாதியாக காங்கிரஸ் கட்சியினர் சித்தரிக்கிறார்கள். மோடி இப்படிப்பட்ட “ஜனநாயகவாதி” அல்ல என்பது தெரிந்தும், தெரியாத மாதிரி நடிக்கிறீர்கள், அப்படித்தானே, சர்மாஜி?.
மற்றொரு முக்கியமான நிகழ்வு, ஜனநாயக நாட்டில் பொறுப்பில் இல்லாத எவரும் பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்பது விதி. ஆனால் அந்த விதியை மாற்றியவர் இந்திரா. பொற்கோவில் ராணுவத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில் எங்கிருந்தாவது ஒரு சீக்கியர் இந்திராவை கொல்லலாம் என தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அரசில் எந்த பொறுப்பையும் வகிக்காத ராஜீவ், இந்திராவின் பாதுகாப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத் துவங்கினார். அவரது விருப்பத்தின் பேரில் அவருக்கு நெருக்கமான ஆலோசகர்களில் இருவர் தங்களது யோசனைகளை தெரிவிக்கவும் அந்த கலந்துரையாடல்கள் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து ராஜீவிடம் தெரிவிக்கவும் அச்சந்திப்புகளில் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு அரசில் எந்த பொறுப்பும் இல்லை என்பதால் முக்கியமான தகவல்கள் பரிமாறப்படும் இந்த மிக ரகசியச் சந்திப்புகளில் கலந்து கொள்ள எந்த உரிமையும் இல்லை. ஆனால் இந்திராவின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என ராஜீவைத் திருப்திப்படுத்துவதற்காக பாதுகாப்பு காரணங்களையும் மீறி அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். எனினும் நிகழ்ச்சிப் பதிவேட்டில் அவர்களது பெயர்கள் இருக்க மாட்டா. இது தான் இந்திரா காந்தியின் ஜனநாயக உணர்வு (ஆதாரம் ’நிழல் வீரர்கள்’; பக்கம் 124).
இன்று வரை எந்த மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முறையாக தேர்வு செய்யப்படவில்லை. டெல்லி உத்தரவின் பேரிலேயே நியமனம் நடைபெறுகிறது; அதுவும் டெல்லி தலைமைக்கு தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மையே வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.
எப்படி ஆனந்த சர்மாவின் ஜனநாயகம்!