மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம், இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஃபியோ) உடன் இணைந்து, வளைகுடா நாடுகளில் விவசாயமும் உணவுப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளும் என்ற கருத்தரங்கை நடத்தியது. இதில் பங்கேற்று பேசிய ஃபியோ அமைப்பின் துணைதலைமை இயக்குநர் கே. உன்னிகிருஷ்ணன், ‘வளைகுடா நாடுகள் அதிக அளவு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கின்றன. பாரதம் ஒரு பெரிய விவசாய நாடு, பெரிய உணவு உற்பத்தி நாடு. அதில் உள்ள மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரத்தை நம்பியிருக்கின்றனர். எனவே, உணவு விநியோகத்தை நிலைப்படுத்துவதன் மூலம் வளைகுடா நாடுகளில் நாம் பலன்களை அடைய முடியும். தற்போது பாரதத்தின் விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களில் 22 சதவீதம் வளைகுடா நாடுகளுக்குச் செல்கிறது. முயன்றால் அடுத்த 5 ஆண்டுகளில் நமது ஏற்றுமதியை இரட்டிப்பாக்க முடியும்’ என்றார். அடுத்து பேசிய பாரத வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் விஷ்வாஸ், ‘மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதை எங்கள் அலுவலகம் ஊக்குவிக்கிறது. வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களின் ஒத்துழைப்புடன் விவசாய ஏற்றுமதி உத்தி வகுக்கப்படுகிறது’ என தெரிவித்தார்.