சர்ச் அகற்ற உத்தரவு

ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள பென்னலுார் கிராமத்தில் உள்ள அரசு நிலம், மயானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மயானத்தின் வழியை ஆக்கிரமித்து கிறிஸ்தவ சர்ச் கட்ட, 2004, 2013களில் முயற்சி நடந்தது. கிராமத்தினரின் எதிர்ப்பால் சர்ச் கட்டப்படவில்லை. ஆனால், பிறகு இரவு நேரங்களில் கட்டுமானம் நடந்தது. மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்கவில்லை. மயானத்திற்கான பகுதியை, அப்படியே பராமரிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று  பென்னலுார் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மாவட்ட நிர்வாகத்தின் வழக்கறிஞர், ‘அந்த இடம் மயானமாக பயன்படுத்தவில்லை. கிராம மக்களும் தீவிர எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’ என்றார். இதனை விசாரித்த நீதிபதி, ‘ஸ்ரீபெரும்புதுார் தாசில்தாரின் பதில் மனு ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக உள்ளது. பொது சொத்துக்களை பாதுகாப்பது அரசு அதிகாரிகளின் கடமை. யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கலாமா? கிறிஸ்தவ மத போதகர் ஆக்கிரமித்ததுடன் அனுமதி பெறாமல் கட்டுமானம் மேற்கொண்டுள்ளார். சட்ட விரோத நடவடிக்கையை அதிகாரிகள் அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே அனுமதியின்றி கட்டப்பட்ட சர்ச், நான்கு வாரங்களுக்குள் இடிக்கப்பட வேண்டும். அதிகாரிகளின் மெத்தனம், கடமை தவறல் குறித்து ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.