சங்கத் தேர்தலில் சங்கத்தவர் வெற்றி

டெல்லி பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தேர்தல் (டி.யு.டி.ஏ) கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அதன் முடிவுகளில் தேசிய ஜனநாயக ஆசிரியர் முன்னணியை (NDTF) சேர்ந்த பேராசிரியர்  டாக்டர் அஜய் குமார் பாகி அந்த சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், இடதுசாரி ஜனநாயக ஆசிரியர் முன்னணி (டி.டி.எஃப்) வேட்பாளர் அபா தேவ் ஹபீப்பை 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். டாக்டர் ஏ.கே. பாகி டெல்லி பல்கலைக்கழகத்தின் தயால்சிங் கல்லூரி பேராசிரியராகவும், வலதுசாரி ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதுவரை, அந்த பதவியை இடதுசாரி ஜனநாயக ஆசிரியர் முன்னணி (DTF) அல்லது காங்கிரஸ் ஆக்‌ஷன் அண்ட் டெவலப்மென்ட் (AAD) அமைப்பினர் மட்டுமே கூட்டணி வைத்து செயல்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனினும், தலவர் பதவியை தவிர ஏனைய நிர்வாகக் குழுத் தேர்தல்களில் தேசிய ஜனநாயக ஆசிரியர் முன்னணியினரே தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.