முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் ஹிந்து, சீக்கிய, கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அளவே இல்லை என்பது உலகறியும். ஆனால், அங்கு வசிக்கும் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்களால் பிரச்சனைதான். பாகிஸ்தானில் வசிக்கும் அஹமதிய முஸ்லிம்கள், வங்க மொழி பேசும் முஸ்லிம்களும் அங்கு கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றங்கள் விலை உயர்ந்ததாகவும் அணுக முடியாததாகவும் கருதப்படுவதால் ஏழைகளுக்கு நீதி எட்டாக்கனியாகவே உள்ளது. கராச்சியில் உள்ள மச்சார் காலனியில் வசிப்பவர்களில் ஏறக்குறைய 65 சதவீதம் பேர் வங்காள இனத்தவர்கள். மொத்த பாகிஸ்தானில் இவர்கள் எண்ணிக்கை சுமார் 12 லட்சம். இவர்களில் கணிசமானவர்கள் 1971 தேசப் பிரிவினைக்கு முன்பில் இருந்தே அங்கிருப்பவர்கள். எனினும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இன்னமும் குடியுரிமை வழங்கப்படவில்லை. பாகிஸ்தானின் தேசிய அடையாள அட்டைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன என பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.