ஒரு ஸ்வயம்சேவகனாக நான் கற்றுக் கொண்டுள்ள பாடம், ‘ நல்ல, நேர்மறை, நம்பிக்கை அளிக்கும் செய்திகளைத் தேடி தேடிப் படி. எல்லோரிடமும் பகிர்ந்து கொள், உனக்கும் நல்லது ஊருக்கும் நல்லது’ என்ற வகையில் சென்ற பத்து நாட்களில் நான் கண்டு கேட்டு படித்தவற்றில் ஒரு சில:
ஒரு விளம்பரம். ஒரு பெண்மணி பக்கத்து வீட்டுக் குடும்பத்துக்கு தான் தயாரித்த தின்பண்டத்தை பாத்திரத்தில் வைத்து கொண்டு வந்து தருகிறார். பெற்றுக்கொண்ட பெண் தன் மகனை (பத்து வயதுக்குள்ள) “எடுத்து வைத்து விட்டு, பாத்திரத்தை திரும்ப கொண்டு வா” என்கிறார். பையனும் எடுத்து வைத்து விட்டு, பலகையின் மீதேறி சமையல் அலமாரியில் ஒரு இனிப்பு பண்டத்தை எடுத்து அதே பாத்திரத்தில் வைத்து திருப்பிக் கொண்டு தருகிறான். பின்னணிக் குரலைக் கேட்கிறோம்: ” வாருங்கள், அன்பைப் பரிமாறுவோம் “. இந்த விளம்பரத்தில் என்னைக் கவர்ந்தவை: 1. அம்மா ஒன்றும் சொல்லாமலே, வெறும் பாத்திரத்தைத் திருப்பி கொடுக்காமல் அவனே இனிப்பை கொண்டு வருகிறான் என்றால் அவனுக்கு இந்த பண்புப் பயிற்சி முன்னதாகவே கிடைத்திருக்கிறது.
2, அந்த இனிப்பு அவனுக்கு எட்டும் உயரத்தில் இல்லையென்றபோதும், அவன் முயற்சி எடுத்துக் கொள்கிறான்.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் தாலுக்கா ஓடந்துறை என்ற கிராமத்தினர் தேவையான மொத்த மின்சாரத்தையும் காற்றாலைகளிலிருந்தும் சூரிய ஒளியின் மூலமாகவும் அவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள். அந்த பஞ்சாயத்து பத்து ஆண்டுகளாக இப்படி மின்சாரத்தில் தன்னிறைவடைந்து விட்டது.
நவம்பர் 1ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை என்று ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் போட்டி போட்டுக் கொண்டு நம் அரசுப் பள்ளி மாணவக் கண்மணிகள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வாகி நீட் தேர்வில் வெற்றி பெற்றது என்பது ஒன்றும் எட்டாக்கனி இல்லை என்று வரும் ஆண்டு மாணவர்களுக்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள்.
சுற்றுச் சூழல் கிளாஸ்கோ மாநாட்டிலும் ஜி 20 நாடுகள் மாநாட்டிலும் பாரதத்தின் பெருமையை மற்றவர்களைப் பாட வைத்த பிரதமருக்கு ஒரு பாராட்டு!
ஒரு மாலை இதழில், தமிழருவி மணியன் தீபாவளி என்பது துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் தான்’ என்பதனை விவரித்து விட்டு முத்தாய்ப்பாக இது ஒரு ஆரிய பண்டிகை என்று பசப்புவது எல்லாம் வெட்டி வேலை என்று முடித்திருந்தார். அவருக்கு ஒரு ஷொட்டு.
பஞ்சாமிர்தத்தைப் பரிமாறுபவர்களின் கைகள் மணப்பதில் வியப்பென்ன?