கார்த்திகை தீபம்

எல்லா யுகங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட முதன்மையான விழா கார்த்திகை தீபத் திருவிழா. “துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண் ணேறலாகும்; விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்!” என்கிறது தேவாரம். ஞானம் பெற ஒரே வழி விளக்கிடுவதுதான் என்கின்றன மறைகள். பார்க்கும் இடம் எல்லாம் கோயில்கள் எனும் புண்ணிய பூமி இது. எனவே, ஆலயங்களில் கடவுளுக்கு நாம் நேரடியாகச் செய்யும் ஒரே தெய்வக் கைங்கர்யம் விளக்கிடுவது.

கார்த்திகை மாதம் முழுக்கவே நம் முன்னோர் தீபமேற்றி வழிபட்டார்கள் என சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. புராண நம்பிக்கைதானே, நாமும் கொண்டாடுவோம் என்றும் ஏனோதானோ என்றும் அவர்கள் கொண்டாடவில்லை. புரட்டாசி, ஐப்பசி மழைக்காலம், குளிர் பரவத் தொடங்கும் காலத்தில் சிறு பூச்சிகளும் கொசுக்களும் அதிகம் பறந்து ஊரெங்கும் காய்ச்சலையும் சளியையும் பரவச் செய்யும். இதை கட்டுப்படுத்தவே இல்லங்கள், தெருக்களில் அக்காலத்தில் தீபமேற்றப்பட்டது. நல்லெண்ணெய், காட்டாமணக்கு, பசு நெய், வேப்பெண்ணெய் என பலவகை மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி விளக்கேற்றினார்கள். குங்கிலியம் போன்ற பல்வேறு பொடிகள், மூலிகைகளை இந்நாளில் தூபமாக எரிப்பதாலும் நன்மைகள் விளைகின்றன. எனவே அறிவியல் ரீதியாகவும் பயன் தருகிறது தீபத்திருவிழா.

திருவாரூர் ஆலயத்தில் விளக்கேற்றும் பணியைச் செய்துவந்த நமிநந்தி அடிகள், நெய் யாசகம் கேட்டு அப்பணியை மேற்கொண்டார். அப்போது பிற சமயத்தார் அவரை, “நெய் இல்லாவிட்டால் என்ன, உமது ஈசனின் அருளால் நீரை விட்டு விளக்கு இடலாமே” என்று கிண்டல் செய்தனர். அவரும் கமலாலயத் திருக்குளத்து நீரில் விடிய விடிய ஆலயம் முழுக்க விளக்கேற்றினார்.

இல்லத்தில் தோன்றும் ஜோதி இருள் கெடுக்கும். எளிமையான சொல்லால் விளையும் ஜோதி தெளிவைக் கொடுக்கும். எல்லோரும் பார்க்கும் பிரமாண்ட விளக்கான சூரிய ஜோதி பலருக்கும் வழியைக் கொடுக்கும். ஆனால் நெஞ்சத்தில் தோன்றும் ‘நமசிவாய’ என்னும் நல்ல விளக்கு ஒன்றுதான் இறைவனை அடைய உதவும் என்று நால்வகை விளக்குகளை நாவுக்கரச பெருமான் நயத்தோடு விளக்குகிறார் திருமூலர்.

இந்நாளில் தான் ஈசன் திரிபுரம் எரித்து ஆணவத்தை அழித்தார். மால் அயன் இருவருக்கும் தோன்றிய மாயையை ஒழித்தார். கன்மம் எனும் வினைப்பயனை ஒழிப்பதும் இந்நாளே என்று புராணங்கள் கூறுகின்றன. எனவே மூவினைகளும் அழியும் இந்த தீபத் திருநாளில் வீடெங்கும் வீதியெங்கும் விளக்கேற்றி வழிபடுவோம். உண்மையான விடியலை பெறுவோம்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி