தணிக்கை தினம்

முதல் தணிக்கை தினத்தை முன்னிட்டு இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அலுவலகத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ‘சி.ஏ.ஜி நாட்டின் கணக்குகளை கண்காணிப்பது மட்டுமல்லாமல், உற்பத்தித்திறன், செயல்திறனிலும் மதிப்பு கூட்டுகிறது, வெளிப்படைத்தன்மை, நல்லாட்சியை மேம்படுத்த சி.ஏ.ஜி சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது. நாட்டில் ஒரு காலத்தில் தணிக்கை அச்சத்துடன் பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அப்படியல்ல. இன்றைய அரசு, ‘குறைந்தபட்ச அரசு அதிகபட்ச ஆளுகை’ என்ற கோட்பாட்டுக்கு இணங்க நடைபெறுகிறது. தானியங்கி புதுப்பித்தல், முகமற்ற மதிப்பீடுகள், சேவை, ஆன்லைன் விண்ணப்பங்கள் என சீர்திருத்தங்கள் அனைத்தும் அரசின் தேவையற்ற தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன. உங்கள் பணியும் எளிதாகிறது. நவீன நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சி.ஏ.ஜி வேகமாக மாறிவிட்டது. பழங்காலத்தில், கதைகள் மூலம் தகவல் பரிமாறப்பட்டது. வரலாறு கதைகள் மூலம் எழுதப்பட்டது. ஆனால் இன்று 21ம் நூற்றாண்டில் தரவுகள் தகவல்களாகும். வரும் காலங்களில் நமது வரலாற்றையும் தரவுகள் மூலம் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் முடியும். எதிர்காலத்தில் தரவு வரலாற்றை ஆணையிடும்’ என்று கூறினார்.