அறநிலைய கல்லூரிகளில் ஹிந்து பாடம்

ஹிந்து கோயில்களின் வருமானத்தின் மூலம், ஹிந்து அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 10 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் ஒரு கல்லூரி உள்பட 4 இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டு மாணாக்கர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து டி.ஆர் ரமேஷ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கும் முடிவிற்கு இடைக்கால தடை விதித்தது. கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் கல்லூரி திறக்கக்கூடாது என்று கூறியதுடன் தற்போது திறக்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகளின் செயல்பாடு முடிவும் தீர்ப்பின் முடிவை பொறுத்ததே எனவும் தெரிவித்து உள்ளது. முக்கியமாக, ஏற்கனவே அமைக்கப்பட்ட கல்லூரிகளில் ஹிந்து மதம் குறித்த ஒரு பாட திட்டத்தை நான்கு மாதங்களுக்குள் அறிமுகப்படுத்துவதை உறுதி செய்ய ஹிந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.

ஒரு கோயிலின் சொத்துக்கள், அதன் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் காணிக்கைகளை நிர்வகிக்கும் அதிகாரம் அறங்காவலர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கும் சூழலில் அறநிலையத்துறை அதிகாரி நிதி சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்க முடியாது, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் அறங்காவலர்களே இல்லை என்ற அடிப்படையில்தான் கோயில் தங்க நகைகளை உருக்கி பணமாக்கும் தி.மு.க அரசின் முயற்சிக்கு நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்தது என்பதும் கொளத்தூர் கபாலீஸ்வரர் கோயிலில் சொத்துக்கள் எதுவுமே இல்லை. ஆனால், அது முதல்வரின் தொகுதி என்பதால், அங்கு அவசர அவசரமாக கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது என்பதும் சிந்திக்கத்தக்கது.