மோசமான முன்னுதாரணம்

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி எல்லையில், பஞ்சாப், ஹரியானா விவசாய ஏஜெண்டுகள், காலிஸ்தான் பயங்கரவாதிகள், காங்கிரஸ் கட்சியினர், இடதுசாரி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் விவசாயிகள் எனும் போர்வையில் தங்கள் எடுபிடிகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் குடியரசு தினத்தன்று, டெல்லியில் டிராக்டருடன் வன்முறை பேரணியை நடத்தினர். இதில் பெரும் கலவரம் வெடித்தது. செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்து தேசியகொடியை அகற்றி தங்கள் அமைப்பின் கொடியையும் காலிஸ்தான் கொடியையும் ஏற்றினர். இந்த வன்முறை போராட்டம் தொடர்பாக 83 பேரை டெல்லி காவல்துறை கைது செய்தது. இந்நிலையில் சித்து ஆதரவுடன் தற்போது புதிய பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்றுள்ள சரண்ஜித் சிங் சன்னி, விவசாய சட்டங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டத்திற்கு அரசின் ஆதரவை தெரிவிக்கும் வகையில், கைதான 83 பேருக்கும் தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு தேசமெங்கும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் பஞ்சாப் தேர்தல் நடக்க உள்ள சூழலில் காங்கிரஸ் அங்கு பரிதாபமாக தோற்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரசை விட்டு வெளியேறி புதிய கட்சியை துவங்கிவிட்டார். அவரும் அகாலிதளமும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கவும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆம் ஆத்மியும் அங்கு தேர்தலில் களம் காண்கிறது. இதனால், எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி இப்படிபட்ட விபரீத முடிவுகள் எடுக்கிறது. ஆனால், அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.