திரிபுராவில் பா.ஜ.க

திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க 34 சதவீத இடங்களை போட்டியின்றி வென்றது. அதாவது மொத்தமுள்ள 334 இடங்களில் 112 இடங்களை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டை என கருதப்பட்ட பல இடங்களும் தற்போது பா.ஜ.க வசமாகியுள்ளன. இந்த தேர்தலில் களமிறங்கியுள்ள திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி போன்றோரின் தேர்தல் பரப்புரைகள் இத்தேர்தலில் அதிகம் சோபிக்கவில்லை. வடகிழக்கு மாநிலத்தை நீண்ட காலமாக ஆட்சி செய்த சி.பி.ஐ (எம்) தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், அதன் எட்டு வேட்பாளர்கள் (நான்கு சி.பி.ஐ.எம், இரண்டு காங்கிரஸ், ஒரு பார்வர்டு பிளாக் மற்றும் ஒரு சுயேட்சை) அகர்தலா முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர் என்பது கூடுதல் தகவல். மீதமுள்ள 222 இடங்களுக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 785 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதற்கு வரும் நவம்பர் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 28ல் நடைபெறும்.