மழை வெள்ளத்தை முன்னிட்டு தி.மு.க முதல்வர் ஸ்டாலின், அவரது மகன், அமைச்சர்கள் என அனைவரும் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பார்வையிடுவதாகக் கூறி போட்டோ ஷூட்டிங் நடத்தி விளம்பரம் தேடிக்கொண்டனர். உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சார விளம்பரமாக இதை அமைத்துக் கொண்டதுடன், முல்லை பெறியாறு பிரச்சனையில் மூக்கறுபட்டது, கோயில் நகை உருக்குவதற்கு நீதிமன்றம் குட்டு, தீபாவளி ஸ்வீட் ஊழல் விவகாரம் என பலவற்றை திசை திருப்பவும் இதனை பயன்படுத்திக் கொண்டனர். மக்களுக்காக உழைக்கும் முதல்வர், அரசின் சாதனை, மக்கள் மகிழ்ச்சி என இவர்களுக்கு தாளம்போடும் ஊடகங்கள் துணையுடன் விளம்பர ஷூட்டிங் விமர்சையாக நடைபெற்றது. ஆனால் மக்கள்பாடுதான் திண்டாட்டம்.
ஸ்டாலினை மூன்றுமுறை எம்.எல்.ஏவாக்கிய கொளத்தூர் தொகுதியே வெள்ளக்காடாகிப் போனது. இத்தனை வருடம் அவர் அங்கு ஏதும் செய்யவில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. முதல்வரின் சொந்தத் தொகுதியே இப்படி என்றால் மற்ற தொகுதிகளின் நிலை? இவரது தந்தை கருணாநிதியும் திருவாரூருக்கு பெரிதாக ஏதும் செய்ததில்லை என்பதும் கடந்த 50 வருட திராவிட ஆட்சிகள் தமிழகத்தையும் அதன் தலைநகர் சென்னையையும் வைத்துள்ள நிலை இதுதான் என்பதும் வேறு விஷயம்.
முதல்வரின் ஷூட்டிங்கின்போது, ‘இதுதான் விடியல் ஆட்சியா’ என சிலர் வாகனத்தை மறித்து கேள்வி கேட்க, அடுத்த முறை அசிங்கப்படக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக, வீட்டு வாசலில் கயிறுகள் கட்டப்பட்டு யாரும் வெளியே வராமல் தடுக்கப்பட்டு ஷூட்டிங் நடத்தப்பட்டது. செருப்பு காலுடன் ஒரு வீட்டிற்கு திடீர் விஜயம், இது ஏதும் தெரியாமல் படுத்திருந்த வீட்டுக்காரர் என ஷூட்டிங் நன்றாகத்தான் நடந்தது. ஆனால், ஸ்டாலின் போவதற்கு முன்பாக அந்த வீட்டில் இருந்த புகைப்படக்காரர்கள், மாஸ்க் போட்ட குடும்பம் என ஷூட்டிங்கில் ஏகப்பட்ட நேட்டிவிட்டி மிஸ்ஸிங்.
இதேபோல, ஆற்றை பார்வையிட்ட முதல்வர் நிற்க அலங்கரிக்கப்பட்ட பந்தல், முதல்வருக்கு மட்டும் ரெயின் கோட், காரில் தொங்கியபடியே பயணித்த அமைச்சர், சில இடங்களை பார்வையிடாமலேயே பார்வையிட்டதாக போட்டோஷாப் என இதில் ஏகப்பட்ட குளறுபடிகள். ஷூட்டிங்கில் லொகேஷன், காமிரா பிரேம், ஆங்கிள், ரிலேட்டிவிடி, நேட்டிவிட்டி, கன்டியூனிடி ஏதும் தெரியாமல் ஏற்பாடு செய்தவர்கள் சொதப்பிவிட, நெட்டிசன்கள் உடனுக்குடன் ‘மீம்ஸ்’ போட்டு கிண்டலடித்து மானத்தை வாங்கினர். பாவம், இதெல்லாம் தெரியாமல் தன் அடுத்த ஷூட்டிங்கிற்கு கிளம்பி இருப்பார் அவர்.
மதிமுகன்