தேசத்தின் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் சாலை திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய பிரதமர், ‘ஸ்ரீசந்த் தியானேஸ்வர் மகராஜ் பால்கி சாலை மற்றும் சந்த் துகாரம் மகராஜ் பால்கி சாலை ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்திட்டங்கள், இப்பகுதியில் சிறப்பான இணைப்பை ஏற்படுத்தும். இத்திட்டங்களுக்கு பகவான் விட்டலும் அவரின் பக்தர்களும், முனிவர்களும் ஆசியளிக்கட்டும். வரலாற்றின் சிக்கலான காலம் முழுவதும் பகவான் விட்டல் மீதான நம்பிக்கை மாறாமல் இருந்தது. இன்றும் மாறாமல் உள்ளது. இந்த யாத்திரை உலகில் மிகப் பழமையான யாத்திரை. இது ஒரு மக்கள் இயக்கம். இறைவழிபாட்டில் பல வழிகள், முறைகள், லட்சியங்கள் இருக்கலாம், ஆனால், இலக்கு ஒன்றுதான் என்பதை இது கற்றுக் கொடுக்கிறது. நமது பாரதத்தின் நித்திய அறிவின் அடையாளமாக உள்ளது. இது நமது நம்பிக்கையை கட்டுப்படுத்தவில்லை, விடுவிக்கிறது. பந்தர்பூருக்கு செய்யும் சேவை, ஸ்ரீ நாராயண ஹரிக்கு செய்யும் சேவை. பக்தர்களுக்காக, இன்றும் கூட பகவான் வாழும் பூமி இது. உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே பந்தர்பூர் இருந்ததாக, சந்த் நாம்தேவ் ஜி மகராஜ் கூறுவார். அவ்வப்போது, தேசத்தின் பல பகுதிகளில், இதுபோன்ற மகான்கள் தோன்றி தேசத்திற்கு வழிகாட்டுகின்றனர். இதுதான் பாரதத்தின் சிறப்பு. தெற்கே மத்வாசார்யார், வல்லபாசார்யார், ராமானுஜர், மேற்கே நர்சி மேத்தா, மீராபாய், திரோ பகத், வடக்கே, ராமானந்தர், கபிர்தாஸ், சூர்தாஸ், குரு நானக், கிழக்கில், சைதன்யர், சங்கர் தேவ் என எண்ணற்ற மகான்களின் சிந்தனைகள் தேசத்தை வளமாக்கின. பக்தர்களும் உள்ளூர் மக்களும் பால்கி சாலைகளில் மரக்கன்றுகளை நடவேண்டும். அந்த நடைபாதைகளில் குடிநீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தூய்மையான புனித தலங்களில் ஒன்றாக பந்தர்ப்பூரை மாற்ற வேண்டும்’ என பேசினார்.