தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதில் முறைகேடுகள் நடப்பதாக பலர் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டும் வகையில் முறைகேடுகள் நடப்பதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் சிலரே குற்றம்சாட்டியுள்ளனர். தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களுடன் செல்போன் எண்ணும் வழங்க வேண்டும். தடுப்பூசி செலுத்திய பின் செலுத்திக் கொண்ட நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன்மூலம் அவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை அரசு உறுதி செய்யும்.
ஆனால் தமிழகத்தின் சில மாவட்டங்களில், சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயன்பாடற்ற அலைபேசி எண்களைப் பயன்படுத்தி, ஆதார் அட்டைக்கு மாற்றாக ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பதிவேற்றம் செய்கின்றனர். சம்பந்தப்பட்டவருக்கு அலைபேசி குறுஞ்செய்தி செல்வதையும் முடக்கி விடுகின்றனர். முதல் கட்டத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர் 2ம் கட்டத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும்போது, வேறு ஆவணங்களை பயன்படுத்தி அவருக்கு தடுப்பூசி செலுத்துகின்றனர். குறுஞ்செய்தி வரவில்லை எனக் கேட்டால், சிக்னல் கோளாறு எனக் கூறி, தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை வழங்குகின்றனர் என்றும் புகார்கள் உள்ளன.
சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக செய்தி வருவதும், தடுப்பூசி செலுத்தியும் பலருக்கு அதற்கான குறுஞ்செய்தி வராததும் முறைகேடு எனும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. சட்டவிரோத குடியேறிகளான ரோஹிங்கியா, வங்க தேசத்தவர்களின் புகலிடமாக தமிழகம் மாறிவருவதால், அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, இத்திட்டத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், கொரோனா தடுப்பூசிகள் அவர்களுக்கு அதிக விலைக்கு விற்கப்படலாம் என்றும் மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனை மத்திய அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும். முறைகேடுகள் நடைபெறுவது உண்மையெனில், சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.