உண்டானதா உருவாக்கப்பட்டதா?

இரண்டு நாட்களுக்கு முன்பு பொழிந்த ஒரேநாள் மழையில் சென்னையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் வெள்ளக்காடானது. 2015ல் வந்த மழையின்போதும் சென்னை வெள்ளக்காடானது. ஆனால், அப்போது பெய்த மழையின் அளவு 45 செ.மீ. தற்பொது வெறும் 23 செ.மீ மட்டுமே. அப்படியெனில் எப்படி சென்னை ஒரே இரவில் வெள்ளக்காடானது, ஏன் இவ்வளவு சேதங்கள் என்ற கேள்வி நம் மனதில் எழாமல் இல்லை.

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் நிலையப் பணிகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகள், அ.தி.மு.க கடந்த 10 ஆண்டுகளாக எந்த பணியையும் செய்யவில்லை, மக்கள்தொகை பெருக்கம் என எவ்வளவு காரணங்களை இதற்கு தி.மு.கவினர் அடுக்கினாலும் ஏனோ சந்தேகம் நீங்கியபாடில்லை.

இந்த மழையில், பல நூறு கோடி செலவழித்துக் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்களில் மழை நீர் வடியவில்லை, கழிவு நீர் வடிகால்களில் கழிவு நீர் செல்லவில்லை. பல இடங்களில் கழிவு நீர் சாலைகளில் வெளியேறுகிறது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு வீச்சில் இயங்கவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மோட்டார் வைத்து வெள்ளம் வெளியேற்றப்பட்டது. இது போன்ற பல சம்பவங்கள் மனதில் நெருடலை ஏற்படுத்தவே செய்கின்றன.

இது போன்ற பேரிடர் காலங்களில் டெண்டரே இல்லாமல் பொருட்கள் வாங்கலாம் என்ற அவசரகால நடைமுறைகளை பயன்படுத்தி கமிஷன் அடிக்கலாம். மத்திய அரசிடம் இழப்பீடு பெற்று அதன் செலவழிப்பில் கணிசமாக லாபம் பார்க்கலாம், சேதங்கள் ஏற்பட்டதாகக் கூறி புதிய டெண்டர்களை விட்டு காசு பார்க்கலாம் என மழையை வைத்து சம்பாதிக்க பல வழிவகைகள் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை தி.மு.கவினர் நழுவ விடுவார்களா என்ன?

மழை வெள்ளத்தை பார்வையிட முதல்வர் ஸ்டலினின் திடீர் விஜயம், விரைவில் வரவுள்ள நகராட்சித் தேர்தல்களில் வெற்றிபெற, வெள்ளத்தை நல்வாய்ப்பாகப் பயன்படுத்த தி.மு.கவினர் முயற்சிக்கின்றனரோ என்ற சந்தேகத்தையும் எழுப்பவே செய்கிறது. ஏனெனில் தி.மு.கவின் கடந்த கால வரலாறு அப்படி.

மதிமுகன்