துபாய் எக்ஸ்போவில் பாரத அரங்கு

துபாயில் நடைபெற்று வரும் பிரம்மாண்டமான  எக்ஸ்போ 2020ல் பாரத அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கம் ஒருமாத காலத்தை நிறைவு செய்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் தேதியன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த அரங்கைத் திறந்து வைத்தார். கடந்த நவம்பர் 3ம் தேதி நிலவரப்படி பாரத அரங்கிற்கு வருகை தந்துள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த எக்ஸ்போ முடியும்வரை இந்த நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரங்கில் பாரதத்தின் வளர்ச்சித் திறனை பறைசாற்றும் விதமாக பல்வேறு துறைகள் மற்றும் பல மாநிலங்களின் அடிப்படையிலான அமர்வுகள் தொடர்ந்து நடைபெற்றவண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி ஏராளமான முதலீட்டு வாய்ப்புகளும் நமது நாட்டிற்கு இதன் வாயிலாக கிடைத்துள்ளது. பார்வையாளர்களைக் கவர பல கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அரங்கில்  வர்த்தக வாய்ப்புகள், கூட்டு முயற்சிகள், முதலீடுகள் ஆகியவை ஒருபுறம் நடந்தேறி வந்தபோதிலும் பாரதத்தின் பாரம்பரிய விழாக்கள், பண்டிகைகள். உணவு வகைகள், கலாச்சார நிகழ்வுகளும் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்க்கின்றன. இங்கு நடத்தப்பட்ட நவராத்திரி கொண்டாட்டங்கள், தசரா, பாரம்பரிய நடனம், கதாகாலட்சேபம், இசை நிகழ்ச்சிகள், தீபாவளி கொண்டாட்டங்கள், அரங்கை வண்ணமயமாக மாற்றியுள்ளது. மொத்தத்தில் பெருமளவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ள அரங்கமாக பாரத அரங்கம் பெயர் பெற்றுள்ளது.