கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை தடை செய்ய தமிழக அரசு திட்டமிட்ட வகையில் முயற்சி செய்வதை கண்டித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்த 4.11.2021ல் கந்த சஷ்டி விழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கி 6 நாட்கள் விரதமும், 9.11.2021 மாலையில் சூரசம்ஹாரமும்,10.11.2021 காலை திருக்கல்யாணம் முடிந்த பின்னர் விரதத்தை முடிப்பது ஹிந்துக்கள் மரபு. மக்கள் பல நூற்றாண்டுகளாக இந்த கந்தசஷ்டி விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் பல பிரச்சினைகளில் இருந்து முருகப் பெருமானின் அருளால் மக்கள் மீண்டு வருவது கண்கூடாக நடக்கும் சம்பவங்கள்.
ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி பாராயணத்தை பக்தர்கள் பாடி கோயிலிலேயே தங்கி விரதம் இருப்பது வழக்கம். ஆனால் தற்போது ஹிந்து விரோத தி.மு.க அரசு, ஹிந்துக்கள் பண்டிகைகளை குறிவைத்து சீர்குலைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஹிந்து விரோதிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் தீபாவளியை தடுக்க நினைத்தது போல, தமிழக அரசும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறுபடைவீடு இருக்கக்கூடிய பகுதிகளில் திடீர் சட்டம் போட்டு கந்தசஷ்டி விழாவை தடை செய்கின்றனர்.
தற்போது கேளிக்கை விடுதிகள் சினிமா தியேட்டர்கள் வேற்று மத வழிபாட்டுத்தலங்கள் அனைத்திற்கும் 100 சதவீத அனுமதி கொடுத்த அரசு, கந்தசஷ்டி விழாவை மட்டும் பக்தர்களுக்கு அனுமதிக்காமல் தடை செய்வதன் நோக்கம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே. சூரசம்ஹாரம் பெருமளவில் நடக்கும் திருச்செந்தூர், பழனி ஆகிய பகுதிகளில் பரப்பளவு அதிகமாக உள்ளது. ஆதலால் சமூக இடைவெளியோடு விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.
ஆனால் கேளிக்கை விடுதிகள், திரையரங்கம் போன்ற பகுதிகள் காற்றோட்டம் இல்லாத அடைக்கப்பட்ட பகுதிகள். அதில்தான் நோய்த்தொற்று வர அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கு அனுமதி கொடுத்து விட்டு பக்தர்கள் பரப்பளவு அதிகமாக உள்ள பகுதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சியையும் திருக்கல்யாண நிகழ்ச்சியையும் பார்க்க அனுமதிக்காதது ஒருதலைபட்சமான செயல். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது. மக்களின் நம்பிக்கையை மனதில் கொண்டு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கந்த சஷ்டி, சூரசம்ஹார விழாவை நடத்த வேண்டியது அரசின் கடமை என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.