மாளய பட்ச காலத்தில் பூலோகத்துக்கு வரும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கிறோம் அல்லவா? அப்படி வந்த முன்னோர்கள் மீண்டும் திரும்பி செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது எம தீபம் மட்டுமே. இதனால் முன்னோர்கள் மட்டும் அல்லாமல் எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார் என்பதால், தீபாவளிக்கு முதல் நாளில் ‘யம தீபம்’ ஏற்றுவது ஹிந்துக்களின் மரபு. இந்த ஆண்டு 2021 நவம்பர் 3ம் தேதி புதன்கிழமை ” சிவராத்திரி சதுர்த்தசி திதியில் தீபம் ஏற்றுவது சிறப்பு, மாலை 5.30க்கு மேல் 6 மணிக்குள் யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும்,சொத்துகள் சேரும். அனைத்து வித தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.விபத்துகள், திடீர் மரணம் போன்றவை ஏற்படாது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
யமன் சூரியனின் மகன். யமன் என்றதுமே எல்லோரும் அச்சப்படுவார்கள். அவர் இருக்கும் திசையான தெற்கு திசையை பார்த்தே பயப்படுவார்கள். ஆனால் அவர் எல்லோருக்கும் சமமானவர். அவருக்கு சிவபெருமான் கொடுத்த கடமை உயிரை எடுப்பது. அதில் அவர் எந்த பாரபட்சமும் பார்ப்பது இல்லை. அவருக்கு நன்றி சொன்னால் அவர் பாதுகாப்பில் இருக்கும் நமது முன்னோர்களை நன்றாக பார்த்துக்கொள்வார்.
அனைத்து சனி பரிகார ஸ்தலங்களிலும் அனைத்து சிவாலய சனீஸ்வரர் சன்னதிகளிலும் எம தீபம் ஏற்றலாம். எம தீபம் குறிப்பாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. எவரேனும் மரணமடைந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணத் தேவையில்லை. இதனை அனைவரும் ஏற்றலாம். நமது வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். வசதி இல்லை எனில் வீட்டிற்குள்ளும் ஏற்றலாம். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும். அல்லது யம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்தில் எட்டுத் திக்குகளிலும் ஏற்றி வைத்து எட்டுத் திக்குகளின் அதிபதிகளான தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திப்பதுடன் யம பயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணை புரிய வேண்டிக்கொள்ளலாம். விளக்கேற்றிய பின்னர், நமது முன்னோர்களை வணங்குவதுடன் நமக்காக உயிர் விட்ட எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள், ராணுவ வீரர்கள், ஹிந்து பலிதானிகளையும் ஓரிரு நிமிடங்கள் மனதால் நினைத்து வணங்குவோம்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி