ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகிலபாரத செயற்குழு முடிவடைந்ததை அடுத்து ஆர்.எஸ்.எஸ் தேசிய பொது செயலாளர் தத்தாத்ரேய ஹொசபளே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய தகவல்களில் சில:
பாரதம் சுதந்திரமடைந்த 75வது வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள், பல்வேறு சமூக அமைப்புகள், பொதுமக்களுடன் இணைந்து அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்டாடவும், அவர்களை முன்னிலைப்படுத்தவும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார்கள். சுதந்திர போராட்டத்துடன் இணைந்து சுவாமி விவேகானந்தர் உட்பட பல ஆளுமைகள் பாரதத்தின் ஆன்மாவை எழுப்ப பாடுபட்டனர். இவ்வேளையில், ‘உலகின் அனைத்து துறைகளிலும் பாரதத்தை சிறந்து விளங்கச் செய்வோம்’ என்று இன்றைய தலைமுறையினர் உறுதிமொழி ஏற்க வேண்டும். தர்மம், கலாச்சாரம், பாரம்பரியத்தை காக்க உயிர் தியாகம் செய்த சீக்கிய தர்மத்தின் ஒன்பதாவது குருவான குரு தேக் பகதூர் சிங்கின் 400வது பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில், சங்கத்தின் லட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் சேவைப் பணிகளைச் செய்தனர். கொரோனா காரணமாக, சங்கப் பணிகளின் விரிவாக்கம் தடைபட்டது, ஷாகாக்கள் சரியாகச் செயல்பட முடியவில்லை, ஷாகாவின் நேரடி வேலைகள் பாதிக்கப்பட்டன. ஆனால், சமூக சேவையாக எங்களின் பணிகள் விரிவாக நடைபெற்றன.
கொரோனாவால் கல்வி, வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்வயம்சேவகர்கள் மக்களிடம் தன்னம்பிக்கையூட்டும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் பயிற்சி, உள்ளூர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல், வங்கிக் கடன் போன்ற துறைகளில் ஸ்வயம்சேவகர்கள் உதவி வருகின்றனர். வரும் காலங்களில் இதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, அதைச் சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தினசரி ஷாகாக்கள் 34 ஆயிரம் இடங்களிலும், வாராந்திர ஷாகா 12,780 இடங்களிலும், மாதாந்திர மிலன் 7,900 இடங்களிலும் நடைபெறுகின்றன. அதாவது 55 ஆயிரம் இடங்களில் சங்கத்தின் நேரடிப் பணி நடைபெறுகிறது. தற்போது 54,382 தினசரி ஷாகாக்கள் தேசம் முழுவதும் நடைபெறுகின்றன.
2025ம் ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு. இதனையொட்டி சங்கப் பணியை மண்டலங்கள் அளவிற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் உள்ள 6,483 தொகுதிகளில் 5,683 தொகுதிகளில் சங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 32,687 மண்டலங்களில் பணிகள் நடைபெறுகின்றன. மொத்தமுள்ள 910 மாவட்டங்களில் சங்கம் 900 மாவட்டங்களில் உள்ளது. 560 மாவட்டங்களில் மாவட்டத் தலைமையகத்தில் 5 ஷாகாக்களும், 84 மாவட்டங்களில் அனைத்து மண்டலங்களிலும் ஷாகா உள்ளது.
வரும் மூன்று ஆண்டுகளில் சங்கப் பணிகள் (2024ம் ஆண்டு) அனைத்து மண்டலங்களையும் சென்றடைய வேண்டும் என்று எண்ணியுள்ளோம். 2022 முதல் 2025 வரை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு முழுநேர ஊழியர்களை ஈடுபடுத்தும் திட்டமும் உள்ளது. கொரோனா காரணமாக வழக்கமான ஷாகா தடைபட்டாலும், மக்கள் தொடர்பு அடிப்படையில், நாட்டில் 1,05,938 இடங்களில் குரு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள்தொகைக் கொள்கை இருக்க வேண்டும். அது சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமமாக இருக்க வேண்டும். இயற்கை வளங்களின் இருப்பைக் கருத்தில் கொண்டு மக்கள்தொகைக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அன்றாட நடவடிக்கை. தீபாவளியன்று பட்டாசுக்கு தடை விதித்தால் மட்டும் தீர்ந்துவிடுமா? உலகின் பல நாடுகளில் பட்டாசு பயன்படுத்தப்படுகிறது. எனவே, எந்த வகையான பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விஷயத்தை மொத்தமாகப் பார்க்க வேண்டும். அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாது.