பாரத கலாசாரம் என்னும் நீரோட்டத்தில் கலந்து பெருங்கேடு விளைவித்துக் கொண்டிருக்கும் விஷத்தை முறிக்க மாற்று மருந்து தேசியக் கல்வியே. பாரதியர்களைத் தம் தேசத்தில், தர்மத்தில், வரலாற்றில், சாதனைகளில் பெருமிதம் கொள்ளச் செய்வதும், கடந்த காலத்தை விடச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அறிவையும் உணர்வையும் ஆற்றலையும் பாரத அன்னைக்கே அர்ப்பணித்து உழைக்கத் தயாராய் இருக்கும் குடிமக்களை உருவாக்குவதும் தேசியக் கல்வியே.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கொல்கத்தா மாநகரின் ஒரு மூலையில் தன் சிறிய பள்ளியில் நிவேதிதை அளித்துவந்தது இத்தகைய தேசியக் கல்வியைத்தான்.
ஆங்கிலக் கல்வியைப் பெறும் பாரதியர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்த அனைத்துமே நல்லவை, சிறந்தவை’ என்று நினைக்க- வேண்டும். அதனால், அவர்களுடைய சுயமரியாதை சிதைந்து தேசிய கலாசாரத்தை அவர்கள் இழக்க வேண்டும். அப்போதுதான் அவர்களை அடக்கியாள முடியும்” என மெக்காலே கணக்குப் போட்டார்.
அவருடைய வஞ்சகத் திட்டத்தை முறியடிக்கும் கல்வியை, அதே பிரிட்டனில் பிறந்த நிவேதிதை தம் சிறிய பள்ளியில் நடைமுறைப்படுத்தினார். பாரதத்திற்கே உரிய வாழ்க்கை முறை, தேசிய கலாசாரம் குறித்து பெருமைப்படத் தம் மாணவியருக்குக் கற்றுக் கொடுத்தார். பாரதத்தாயின் புதல்வியரே, நீங்கள் எதிலும் அந்நியருக்குத் தலை வணங்க வேண்டியதில்லை. உங்கள் பெருமையை உணருங்கள். உங்கள் முன்னோரின் உயர்வை நினைத்துப் பெருமிதம் கொள்ளுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள் என்றார். பாரதியர்களை பாரதியர்களாக இருக்கச் செய்தார்.
சரஸ்வதி பூஜையின் போது குழந்தைகள் தம் பள்ளிப் பாடப்புத்தகங்கள் அனைத்தையும் பூஜையில் வைத்து வழிபடுவதைப் பார்த்த நிவேதிதை, “பழமையிலிருந்து சிரமப்பட்டு அடையவேண்டிய மாற்றமாகிய புதுமையைத் தன்மயமாக்கிக் கொள்ளும் முயற்சிக்கு பாரதம் தன் ஒப்புதலை அளித்துவிட்டது என்பதையே இந்நிகழ்வு காட்டுகிறது. ஏனென்றால், நவீன உலகில் பாரதம் தனக்குரிய உண்மையான இடத்தைப் பெறவேண்டுமானால் உள்நோக்கமில்லாத, மானுடம் முழுவதற்கும் பொதுவான பண்பாட்டின் கூறுகளாக உள்ள நவீன ஞானங்கள் அனைத்தையும் தனக்குரியதாக்கிக் கொள்வதைத் தவிர்க்க முடியாது.”
“தன்னுடைய கடந்த காலத்தோடு தனக்குள்ள தொடர்பை முறித்துக் கொள்ளாமல் தற்கால முன்னேற்றத்தின் முதல் வரிசையில் நிற்க பாரதம் கற்றுக் கொள்ளலாம், அதற்கான சாத்தியக்கூறுகள் பாரதத்திடம் உள்ளன என்பதற்கு சரஸ்வதி பூஜை நல்ல உதாரணம்” என்றார் சகோதரி நிவேதிதை.
அமரர் என்.டி.என் பிரபு