ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு நிறுவனத்தில் 50 கோடிகள் நஷ்டம். சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவில் சென்று அமர்ந்தார்.
அப்போது ஒரு பெரிய மனிதர் அருகில் வந்து ஏன் சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு இவர், 50 கோடி நஷ்டம் ஆன கதையை சொல்லி வருந்தினார்.
‘அப்படியா, சரி 50 கோடி இருந்தால் நீ சரியாகி விடுவாயா’ என்று கேட்டார் அவர்.
உடனே இவரும் “ஆம் எல்லாம் சரியாகி விடும்” என்றார்.
பின்னர் அந்த செல்வந்த,ர் 500 கோடிக்கு செக் ஒன்றை கொடுத்து, நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. சரியாக ஒரு வருடம் கழித்து இந்த பணத்தை திருப்பிக் கொடு. அன்று இங்கே நான் காத்திருப்பேன்” என்று சென்று விட்டார்.
சந்தோஷமாக தன் அலுவலகம் வந்து செக்கை பீரோவில் வைத்து பூட்டினார். ஊழியர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதில், ‘நண்பர்களே, நமக்கு 50 கோடி நஷ்டம், ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி உள்ளது. அதனை நான் தொடமாட்டேன். நஷ்டம் எப்படி, ஏன் ஏற்பட்டது? என்று ஆராய்ந்து, அதை களைந்து நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.
வேலைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுபிடிக்கபட்டு களையப்பட்டன. ஊழியர்களும் ஓத்துழைத்தனர். சரியாக ஒரு வருடம் கழிந்தது. கணக்கு பார்த்தபோது, 550 கோடி லாபம்.
அடுத்த நாள் காலையில், 500 கோடி செக்கை எடுத்துக்கொண்டு பூங்கா விரைந்தார். அதே சிமெண்ட் பெஞ்ச். சற்று நேரம் கழித்து தூரத்தில், அந்த செல்வந்தரும் ஒரு பெண்மணியும் வந்தனர். சில விநாடிகள் கழித்து அந்த பெண்மணி மட்டும் வந்தார். செல்வந்தரை காணவில்லை.
இவர் பெண்மணியிடம், அம்மா உங்களுடன் வந்தவர் எங்கே என கேட்க, அந்த பெண்மணி பதட்டத்துடன் “அவர் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்தாரா? என கேட்டார்.
“இல்லை, ஏன் கேட்கிறீர்கள்?”
“அவருக்கு சற்று மனநிலை சரி இல்லை. செக் தருகிறேன் என்று பழைய செக்கை கையெழுத்திட்டு பலருக்கும் கொடுத்து விடுவார்” என்றார்.
ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேச்சு வரவில்லை. நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயமாக முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்பதை புரிந்துகொண்டார்.