கதி சக்தி திட்டத்துக்கு ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்த மாபெரும் தேசிய உள்கட்டமைப்பு திட்டமான கதி சக்தி (விரைவு சக்தி) என்ற திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அனுமதி, பிரதமரின் கதி சக்தித் திட்டம் செயல்பாட்டிற்கு வருவதை விரைவுபடுத்தவும், அரசுத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், பல்வகை சரக்குப் போக்குவரத்து அமைப்புகள், பொது மக்கள், தொழில்துறைகள், உற்பத்தியாளர்கள், விவசாயிகளை ஒருங்கிணைக்கவும் உதவும். இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த, நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடல் கட்டமைப்பு உருவாக்கப்படும். இந்த தேசியப் பெருந்திட்டம் மூன்றடுக்கு அமைப்பு மூலம் கண்காணிக்கப்படும். இதற்கென அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். சரக்குப் போக்குவரத்துப் பிரிவின் தலைவர் இதன் அமைப்பாளராக செயல்படுவார். பின்னாளில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான விதிமுறைகளை வகுக்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளை கொண்ட பன்முக வலையமைப்புத் திட்டமிடல் குழு இதற்கென உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.