அமெரிக்கா கண்டனம்

வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற ஹிந்து கோயில்கள், துர்கா பூஜை பந்தல்கள், வீடுகள், கடைகள் மீதான வன்முறை தாக்குதல்கள், தீவைப்பு, பெண்கள் மானபங்கம், கொலை, கொள்ளை போன்றவற்றை அமெரிக்கா கண்டித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், மத சுதந்திரம் காக்கப்பட வேண்டும், மனித உரிமை மீறல்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். பாரத வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க அரசியல்வாதியான துளசி கப்பார்டும் வங்கதேச வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, உள்துறை அமைச்சர் அசாதுசமான் கானுக்கு மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஐ.நா சபையின் வங்கதேச நிரந்தர பிரதிநிதி ரபாப் பாத்திமா, வங்க தேசத்தில் சிறுபான்மை ஹிந்து சமூகத்தின் மீதான கொடூரமான தாக்குதல்களை நடத்திய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை டாக்கா உறுதி செய்யும் என்று கூறினார்.