டெல்லியில் ‘செரா வீக்’ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட 5வது இந்திய எரிசக்தி பேரவை கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ‘புதிய எரிசக்தி உள்கட்டமைப்பை நாம் உருவாக்கும்வரை நம்பத்தகுந்த கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் தேவை. இதுவரை காணாத சவால்களை உலகம் எதிர்கொண்டுள்ளது. எரிசக்தி மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மிகப்பெரிய சமமின்மை எரிசக்தி சந்தைகளில் நிலவுகிறது. தற்போதைய எண்ணெய், எரிவாயுவின் விலைகள் அதிகமாக உள்ளன. இதற்கு பாரதம் கச்சா எண்ணையில் 85 சதவீதமும், எரிவாயுவில் 55 சதவீதமும் இறக்குமதியை சார்ந்துள்ளதே காரணம். தேசத்தின் ஒட்டுமொத்த இறக்குமதி செலவுகளில் 20 சதவீதம் இதற்கு மட்டுமே செலவாகிறது. கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இவற்றின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக உருவாவதற்கான நடவடிக்கைகளை பாரதம் எடுத்து வருகிறது’ என கூறினார்.