சீனாவின் தேசிய மேம்பாடு மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பொது ஆலோசனைக் கட்டுரையின் படி, தனியார் செய்தி சேகரிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படும். செய்தி நிறுவனங்கள், செய்தித்தாள் வெளியீட்டாளர்கள், ஒளிபரப்பாளர்கள் உட்பட செய்தி நிறுவனங்களை நிறுவுதல், செயல்படுத்துவதில் தனியார் முதலீடுகள் கட்டுப்படுத்தப்படும். வெளிநாட்டு ஊடக செய்திகளை உள்நாட்டு செய்தி நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், விரைவில் சீனாவின் அனைத்துத் தனியார் செய்தி நிறுவனங்களும் அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் சொல்லப்பட்டுள்ள இந்தத் தடைகள் பரந்த ஆவணத்தின் ஒரு பகுதிதான். அக்கட்டுரையில், நிதி நிறுவனங்கள், இணையம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் தனியார் முதலீடு, வெளிநாட்டு முதலீடு போன்றவைகளுக்குத் தடைகளை விதிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.