குலசை விழாவை தடுக்கும் தி.மு.க அரசு

துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற முத்தாரம்மன் கோயில், தசரா திருவிழா, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மிக விமர்சையாக நடைபெறும் இவ்விழாவில் பக்தர்கள் பத்து நாட்கள் விரதமிருந்து, தங்கள் வேண்டுதல்களின்படி வேடங்கள் அணிந்து, தர்மம் எடுத்து, கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் தசரா திருவிழாவில் பங்கேற்காமல் இருந்தனர். கொரோனா தாக்கம் தற்போது வெகுவாக குறைந்துள்ளதாலும், அதிகம் பேர் தடுப்பூசி போட்டுள்ளதாலும் மக்கள் இந்த ஆண்டு தங்கள் வழிபாடுகளை நடத்த, வேண்டுதலை நிறைவேற்ர, அம்மனை தரிசிக்க அதிக அளவில் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். ஆனால், தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு வரும் 15 முதல் 17 வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக அறிவித்துள்ளது.

ஆனால், புன்னைக்காயல் ஆர்.சி., கிறிஸ்துவ கன்னிமாதா ஆலய பெருவிழா, கடந்த 3ம் தேதி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. தேர் பவனியில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் எவ்வித தடையும் இன்றி பங்கேற்றனர். இதனை அனுமதித்த தி.மு.க அரசு, முத்தாரம்மன் தசரா விழாவுக்கு மட்டும் கெடுபிடி காட்டுவது அதன் மாற்று மதத்தவர் மீதான பாசத்தையும், ஹிந்துக்கள் மீதான வெறுப்பையும், ஹிந்து விரோத கொள்கையையும் எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது. இதற்கு ஹிந்து அமைப்புகள், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு ஜாதி சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு நீதிமன்றத்தை நாடப்போவதாக பா.ஜ.கவின் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 15, 16, 17 தேதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், காணிக்கை செலுத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோவில்களில் மட்டும் தரிசனத்திற்கு தடை போட்டுள்ள தி.மு.க அரசின் அதிகாரிகள் சர்ச்சுகள், மசூதிகளில் பிராத்தனை, தொழுகைக்கு அனுமதிக்கின்றனர். முத்தாரம்மன் கோயில் தசரா விழாவுக்கு கெடுபிடி விதிப்பது மக்கள் சாபம் மட்டுமல்ல, கடவுள் சாபத்தையும் சேர்த்து வாங்குவது போன்றது என தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மேயரும், பா.ஜ.க பிரமுகருமான சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.