கொரோனாவை காரணம் காட்டி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகத்தில் உள்ள கோயில்களை திறக்க தி.மு.க அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு முக்கிய கோயில்கள் முன்பாக பா.ஜ.க சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. சென்னை மண்ணடியில் காளிகாம்பாள் கோயில் முன்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், ‘தி.மு.க.,வின் சித்தாந்தந்தங்களை எங்கள் பூஜை அறைக்கு கொண்டு வராதீர்கள். கோயில்களை மூட இல்லாத கொரோனாவை காரணம் காட்ட வேண்டாம். தமிழகத்தில், பள்ளி, கல்லுாரிகள், திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் போன்றவை திறந்திருக்கும் போது வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் கோயில்களை திறந்து சுவாமியை தரிசிக்க அனுமதிக்க வேண்டும். 10 நாட்களில் கோயில்களை திறக்காவிட்டால் சிறை செல்லவும் நாங்கள் தயார். கோயில்களில் உள்ள நகைகள் அனைத்தும் அக்கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு சொந்தமானவை. அவற்றை தி.மு.க அரசு உருக்கக்கூடாது’ என்று பேசினார். இதேபோன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், கோவை தண்டுமாரியம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் முன்பாக பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.