அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஊடுகதிர் (எக்ஸ்ரே) எடுத்துக் கொண்ட மக்களுக்கு அதற்கான முடிவுகள் வெள்ளைத்தாளில் விநியோகிக்கப்படுகின்றன, நிதிப் பற்றாக்குறையால் கடந்த சில வாரங்களாக இதுபோன்ற நிலை நிலவுகிறது. வெள்ளைத்தாள் முடிவுகள் தெளிவாக இருப்பதில்லை. இதனால், வேறு ஒரு மருத்துவரிடம் காண்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது., இது குறித்து கேட்டதற்கு மருத்துவக் கண்காணிப்பாளர் ஒப்பந்தம் விடுவதில் சிக்கல், படச்சுருளின் இருப்பு குறைவை காரணமாக கூறியுள்ளார். மருத்துவம், சட்டம் சார்ந்தவற்றிற்கு மட்டும் படச்சுருளில் முடிவுகள் தரப்படுகிறது. மருத்துவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் முடிவுகள் பகிரப்படுகிறது என செய்திகள் வந்துள்ளன. படச்சுருளில் முடிவுகளைத் தர ரூ. 50 செலவாகிறது. வெள்ளைத்தாளில் அந்த செலவு இல்லை என கூறப்படுகிறது. எனவே, தமிழக முதல்வர், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எக்ஸ்ரே முடிவுகளை படச்சுருளில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என கூறியுள்ளார். மேலும், தி.மு.க. ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட 2021 – 2022ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் மருத்துவம், குடும்ப நலத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நீதித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உயர் கல்வித்துறை, மதிய உணவு திட்டம், பள்ளிக் கல்வித்துறை போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.