ராம்நாத் கோயங்கா

ராம்நாத் கோயங்கா, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர். நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்து, துணிச்சலுடன் குரல்கொடுத்தவர்களுள் ஒருவர். ராம்நாத் கோயங்கா பிகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவில் தில்தர் நகர் என்ற கிராமத்தில் பிறந்தார். வாரணாசியில் தனது தொடக்கக் கல்வியை முடித்ததும் வியாபாரத்தில் ஈடுபட்டார். மூங்கிபாய் என்பவரை திருமணம் செய்தார். தனது மாமாவுடன் இணைந்து யார்ன், சணல் வியாபாரத்தின் அடிப்படைகளை கற்க கொல்கத்தா நகருக்குச் சென்றார்.

சுகதேவ்தாஸ் ராம் பிரசாத் என்பவரின் வர்த்தகப் பிரதிநிதியாகச் சென்னை வந்தார். சென்னையில் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபாடு காட்டினார். மேல்தட்டு மக்களிலிருந்து எளியோர் வரை அனைவரிடமும் நன்றாகக் பழகினார். இவரின் செயல்களால் கவரப்பட்ட சென்னை நிர்வாகம் 1926ல் ராம்நாத் கோயங்காவைச் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமித்தது. பதவியை மக்களுடைய நன்மைக்காகவே பயன்படுத்தினார்

தேசிய எழுச்சி கொண்ட பத்திரிகைகளுக்கு உதவுவதை கடமையாக கருதினார். ‘ஸ்வராஜ்யா’வுக்கும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கும் உதவிகளைச் செய்தார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘தினமணி’ நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனார். 1941ல் தேசிய இதழாசிரியர் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டர்.

இரண்டாவது உலகப் போரின்போது பாரதத்தில் பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்பட்டன. இதழாசிரியர்கள் ஆங்கிலேயர் அடக்குமுறையை கண்டிக்கும்விதமாக நாட்டிலுள்ள அனைத்து இதழ்களையும் கால வரையின்றி மூடத் தீர்மானித்தனர். மகாத்மா காந்தியும் ‘ஹரிஜன்’ உள்ளிட்ட இதழ்களையும் நிறுத்தினார்.

ராம்நாத் கோயங்காவும் தமது பத்திரிகைகளை காலவரையின்றி நிறுத்தினார். ஆனாலும், நாடெங்கும் நடக்கும் அராஜக கெடுபிடிகள் உலகறியச் செய்ய வேண்டும் என்று கோயங்கா துடித்தார். அந்த செய்திகளைச் சேகரித்து, நூலாக உருவாக்கி தனது ‘பாரதத்தில் படுகொலை’ என்ற தலைப்பில் அச்சகத்தில் ரகசியமாக ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு பிரிட்டன் நாடாளுமன்ற அங்கத்தினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்தார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்தும் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு ஆதரவாக செய்திகளை இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியிட்டார். சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து அரசாங்கம் நியமித்த நிர்வாக குழுவை கலைத்தார்  இதழ் உலகின் சுதந்திரத்திற்கும் நடுநிலைத் தன்மைக்கும் சான்றாக வாழ்ந்த ராம்நாத் கோயங்கா 1991, அக்டோபர் 5ல் மறைந்தார்.