மோடியின் வெற்றியா பாரதத்தின் வெற்றியா?

ஓப்பன் மேகசின் என்ற இதழுக்கு அளித்த பேட்டியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள் போராட்டம் உட்பட பலதரப்பட்ட பிரச்சினைகளை குறித்து பேசினார். அப்போது அவர், ‘ஆதார், ஜி.எஸ்.டி, விவசாய சட்டங்கள், நமது ராணுவத்துக்கு நவீன ஆயுதங்கள் கொள்முதல் போன்ற தேசம் சம்பந்தப்பட்ட பல முக்கியமான விஷயங்களின்போது எதிர்கட்சிகள் செய்யும் அரசியல் துரோகத்தை நன்றாக பார்க்கலாம். சிறு விவசாயிகளுக்கு அனைத்து வகையிலும் அதிகாரம் அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அதில் எந்தக் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் ஒன்றாக அமர்ந்து அந்தப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க முதல் நாளில் இருந்தே அரசு தயாராக உள்ளது. இது தொடர்பாக பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இது மாற்றப்பட வேண்டும் என்று யாருமே குறிப்பிட்ட கருத்தை இதுவரை சுட்டிக்காட்டவில்லை.

2019 தேர்தல்களுக்கு முன் விவசாய சீர்திருத்த சட்டங்கள் குறித்து தேர்தல் வாக்குறுதி அளித்தது காங்கிரஸ். ஆனால், அதனை இன்று எதிர்ப்பவர்களும் நேர்மையின்றி துரோகத்தை செய்பவர்களும் இவர்கள்தான். எங்கள் அரசு செய்யும் இதே சீர்திருத்தங்களைச் செய்யும்படி மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியவர்கள் இவர்கள். ஆனால், அதனை நாங்கள் கொண்டுவரும்போது எதிர்க்கின்றனர்.

நான் விமர்சனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். அது வளர்ச்சிக்கு உதவுகிறது. நேர்மையான மனதுடன், விமர்சகர்களை மதிக்கிறேன். நாட்டு மக்கள் புத்திசாலிகள். தன்னலமற்ற நல்ல நோக்கத்துடன் செய்யப்படும் அனைத்தையும் புரிந்துகொண்டு அதை ஆதரிப்பார்கள். அதனால்தான் 20 வருடங்களாக அரசின் தலைவராக பணியாற்ற நாட்டு மக்களால் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசு எடுத்துவரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் நன்மைகள் வெளியே தெரிய கண்டிப்பாக அதிக காலம் ஆகும். ஒரு விதையை விதைக்கும் நபர், அதன் பலனை யார் பெறுவார் என்று கவலைப்படக்கூடாது. எனது பொருளாதாரக் கொள்கைகளின் பலனை நான் பெறமுடியுமா இல்லையா என்பது முக்கியமல்ல. தேசம் பயனடையும் என்பதே முக்கியம். கேள்வி, மோடி வெற்றி பெறுகிறாரா, தோல்வியடைந்தாரா என்பது அல்ல. நம் நாடு வெற்றி பெறுகிறதா என்பதைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று நான் தெரிவிக்க விரும்புகிறேன்’ என கூறினார்.