ஒரு சமயம் லால் பகதூர் சாஸ்திரி சுதந்திர போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு சிறையில் இருந்தார். சாஸ்திரியின் குடும்பச் செலவுகளுக்காக மாதந்தோறும் இந்திய சமூக ஊழியர்கள் அமைப்பு 50 ரூபாய் வழங்கியது. சிறையில் இருந்த சாஸ்திரி தனது மனைவிக்கு அப்போது எழுதிய கடிதம் ஒன்றில் உதவித்தொகை சரியான நேரத்தில் கிடைக்கிறதா? 50 ரூபாயைக் கொண்டு குடும்பச் செலவுகளை பராமரிக்க முடிகிறதா என்று கேட்டிருக்கிறார்.
கணவரின் கடிதத்திற்கு உடனடியாக பதில் அளித்த லலிதா சாஸ்திரி, 50 ரூபாய் குடும்பச் செலவுக்கு போதுமானதாக உள்ளது. 40 ரூபாய்க்குள் செலவுகளை முடித்துக் கொள்கிறேன். மாதம் 10 ரூபாய் சேமிக்க முடிகிறது என்று கூறியிருக்கிறார். மனைவியின் இந்த கடிதத்தை பார்த்த சாஸ்திரி உடனடியாக இந்திய சமூக ஊழியர்கள் அமைப்புக்கு கடிதம் எழுதி, என் குடும்பத்தின் செலவுகளுக்கு 40 ரூபாய் போதும், மீதமுள்ள 10 ரூபாயை தேவைப்படும் பிறருக்கு வழங்குங்கள் என்று கூறியிருக்கிறார்.
நம் நாட்டின் பிரதமராகும் வரை லால் பகதூர் சாஸ்திரிக்கு சொந்த வீடு மட்டுமல்ல, சொந்தமாக காரும் கிடையாது. நாட்டின் பிரதமரானதால், கார் வாங்குங்கள் அப்பா என்று அவரது பிள்ளைகள் கேட்டனர். இதையடுத்து கார் வாங்க முடிவெடுத்தார் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. கடன் வாங்கி கார் சாஸ்திரி நேராக கார் ஷோரூமுக்கு சென்றார். அப்போதைய காலக்கட்த்தில் பியட் கார் 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. அவரது வங்கிக்கணக்கில் ஏழாயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. வங்கியில் இருந்து கடன் வாங்கி கார் வாங்கினார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி, அந்த காரை வாங்கினார்.
வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் முன் லால் பகதூர் சாஸ்திரி தாஸ்கண்டில் அகால மரணம் அடைந்தார். சாஸ்திரியின் மறைவுக்கு பின் பிரதமராக பதவியேற்ற இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரியின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். எனினும் வங்கி கடனை தள்ளுபடி செய்வதை மறுத்த அவரது மனைவி லலிதா சாஸ்திரி தனது ஓய்வூதியத்தில் இருந்து கடனை அடைத்தார்.