லகு உத்யோக் பாரதி வரவேற்பு

லகு உத்யோக் பாரதி அமைப்பின் தேசிய துணைத் தலைவர் ஹரிஹரன் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லகு உத்யோக் பாரதி அமைப்பின் நிர்வாகிகள், செப்டம்பர் 13 அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். ரிசர்வ் வங்கி மறுசீரமைப்பு விதிகள் 2.0, சிறு குறு நிறுவனங்கள் கூடுதல் கடன் பெறுவதில் உள்ள சிக்கல், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்துக்கான கடன் செலுத்தும் கடைசி தேதியை நீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் சில அறிவிப்புகள் செப்டம்பர் 29ல் வெளியாகின. அதில் அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் 1.0 மற்றும் 2.0 ஆகியவற்றின் கீழ் சிறு, குறு கடன் வாங்கிய நிறுவனங்கள் 2021 மார்ச் 31ம் தேதி வரை நிலுவையில் உள்ள கடன் தொகையில் 10 சதவீதம்வரை கூடுதலாக பெற்றுக் கொள்ளலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன. அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு கொரோனா 2ம் அலையால் வணிகங்கள் மோசமாக பாதிக்கப்படுவதை தடுப்பதுடன், வளர்ச்சிக்கு தேவையான ஆதரவையும் வழங்கும். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் தொழில்துறையினருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு எங்கள் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.