கோயில்களை திறக்க வலியுறுத்தல்

வரும் 01.11.2021 தேதி அன்று 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அனைத்துப் பள்ளிகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. இதை தமிழக பா.ஜ.க வரவேற்கிறது என தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘அனைத்து மதத்தவரும் அவரவர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல அரசு தடை விதிக்காமல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஹிந்துக்களின் புனிதமான புரட்டாசி மாதத்தில் கோயில்கள் திறக்கப்படாமல், கொரோனா பாதுகாப்பு விதிகளுடன் வழிபடுவதற்கு வழி செய்யாமல், தடுப்பது மக்கள் நலத்திற்காகவா அல்லது தங்கள் கொள்கைகளை திணிப்பதற்காகவா?

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ், ஃப்ளோரிடா உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மாகாணங்களில் புரட்டாசி மாதத்தை இந்துக்களின் புனித மாதமாக அங்கீகரித்து வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல வழிவகை செய்துள்ளன. பாண்டிச்சேரியிலும் கட்டுப்பாடுகளுடன் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு வழக்கம் போல ஹிந்துக்களுக்கு விதிக்கும் தடையால் பாவம் அனைத்து மதத்தினரும் பாதிக்ககப்படுகிறார்கள். ஆகவே, அரசுக்கு மக்கள் அழுத்தம் கொடுப்போம், வழிபாட்டுத் தலங்களை திறக்க வைப்போம்’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல, ‘கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்குவதாக கூறப்படும் நிலையில், குழந்தைகள் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், ஹிந்து கோயில்களை மட்டும் எதற்காக மூட வேண்டும். இது பெரும்பான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் நடவடிக்கை. இவ்வாறு செய்தால் மக்களும் தண்டிப்பார்கள், மகேசனும் தண்டிப்பார். எனவே உடனடியாக ஹிந்து கோயில்களை திறக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.