சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள மொழி பயன்படுகிறது. அண்டை மாநிலத்தவர், வெளிநாட்டவர்கள் நமது உள்ளூர் கலாச்சாரத்தை எளிதில் அறிந்து கொள்ள மொழிபெயர்ப்பு மிகவும் அவசியம். உலகின் அனைத்து மொழிகளுமே சிறந்ததுதான். அதற்கென கண்டிப்பாக சில தனி சிறப்புகள் உள்ளன. ஆனால், பல மொழிகள் மெல்ல அழிந்து வரும் சூழலில் அவற்றை மீட்டெடுக்க உதவி புரிவது மொழிப்பெயர்ப்புதான். அதாவது, ஒரு மொழி மற்றொரு மொழியை வளர்க்கிறது எனலாம்.

அடுத்த மொழியை அறிந்தால் தான், தன் மொழியை மேம்படுத்த முடியும் அதனை விடுத்து ஹிந்தி கூடாது, சமஸ்கிருதம் ஆகாது என்பதெல்லாம் வெற்று அரசியல் கூச்சல் என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும். பல மொழிகளை கற்பது வேலைவாய்ப்பை உண்டாக்கும். உலகெங்கும் மொழிபெயர்ப்புத் துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உலகின் 40 லட்சம் தொழில் நிறுவனங்கள் மொழி பெயர்ப்பை நம்பியே உள்ளன.

1953ல் அமைக்கப்பட்ட சர்வதேச மொழிபெயர்ப்பாளர் கூட்டமைப்பு, 1991ல் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்குள் ஒருமைப்பாட்டை காட்டும் விதமாக ‘சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்’ கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. அதன்படி, இன்றைய தினம் சர்வதேச மொழிபெயர்ப்பாளர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கலை இலக்கியத்துறை, அறிவியல், தொழில்நுட்பம் என பல்வேறுத் துறைகளில் மொழிபெயர்ப்பு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், படைப்பு இலக்கியவாதிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு கிடப்பதில்லை. மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பதற்காக பரிசு பெற்ற படைப்பாளிகள் அதனை கண்டுகொள்வதே இல்லை என்று குற்றச்சாட்டு இன்றும் உண்டு.

மொழிபெயர்ப்பாளர்கள் இல்லையெனில் திருக்குறள், பகவத்கீதை உள்ளிட்ட நமது நாட்டு பெருமைமிகு நூல்கள் வெளிநாட்டு மொழிகளிலும், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்க முடியாது. இவை அனைத்தும் மொழிபெயர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் மட்டுமே சாத்தியம் மொழிபெயர்ப்பு படைப்பாளிகளுக்கு பாராட்டும், அங்கீகாரமும் மிகவும் அவசியம்.

இன்றையகால நவீன அலைபேசி, கணினி, இணையம் போன்ற தொழில்நுட்பங்கள், உலகமயமாக்கல் காரணமாக தற்போது பழைய மொழிபெயர்ப்புகள் எல்லாம் மறுபதிப்புப் பெற்றுவருகின்றன. புதிய மொழிபெயர்ப்பாளர்கள் பலர் தோன்றி வருகின்றனர். இதனால், சமகால நூல்கள் இன்று உடனுக்குடன் மொழிபெயர்ப்பாக கிடைக்கும் சூழல் உருவாகிவருகிறது. இது மிகவும் ஆரோக்கியமானதே. இவ்வகையில் இக்கால சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் கொண்டாடத்தக்கதே.