இவ்வாண்டு சுதந்திர தின உரையின் போது, தற்போதுள்ள விதிகள், நடைமுறைகளை தொடர்ச்சியாக மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். அதனை செயல்படுத்தும் விதமாக, வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் நிலுவையில் உள்ள அனைத்து பொது குறைகள், புகார்களுக்கு தீர்வு காணுமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, நாடாளுமன்றம், எம்.பிக்கள், மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள அனைத்து கோப்புகளுக்கும் விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், தேவையற்ற, பழைய கோப்புகள், வழக்கற்றுப் போன பொருட்கள் அனைத்தும் அகற்றப்படும். காந்தி ஜெயந்தியன்று தொடங்கப்பட்ட நாடு தழுவிய தூய்மை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதி இது. மத்திய அரசு, ஒரு புகாரைத் தீர்ப்பதற்கான அதிகபட்சகால அளவை இவ்வாண்டு 60 நாட்களில் இருந்து 45 நாட்களாகக் குறைத்தது. இதுவரை 87 சதவிகித புகார்கள் 45 நாட்களுக்குள் தீர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.