டெல்லி, நஜாப்கரில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கடந்த 2014 முதல் கட்டப்பட்டு வருகிறது. எனினும் முடிந்தபாடில்லை. இதனை விரைந்து கட்டி முடிக்கக் கோரி ராஜேஷ் கௌஷிக் என்பவர் தாக்கல் செய்த மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், மத்திய அரசின் வழக்கறிஞர், ‘அங்குள்ள மரங்களை இடமாற்றம் செய்ய மத்திய அரசு அனுமதி கேட்டு கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்கு தொடர்ந்து பல கடிதங்கள் எழுதியது. எனினும் மாநில அரசு அதற்கு எந்த பதிலும் இதுவரை அளிக்கவில்லை. 80 சதவீத கட்டுமானப் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. டெல்லி அரசின் தாமதத்தால் பணிகள் நிலுவையில் உள்ளது’ என தெரிவித்தார். இது குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், ‘டெல்லி அரசின் மந்தமான அணுகுமுறையால் பொதுமக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி அரசு தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். நவம்பர் 8ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்’ என்று தெரிவித்தனர்.