லால்குடி ஜெயராமன்

லால்குடி ஜெயராமன் திருச்சி மாவட்டம் லால்குடியில் செப்டம்பர் 17, 1930ல் பிறந்தவர். தமிழகத்தை சேர்ந்த கர்நாடக இசை அறிஞர் இவர். வயலின் கலைஞர், கவிஞர், இசையமைப்பாளர், பாடகர், இசை ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். கர்நாடக இசைப் பயிற்சியை தனது தந்தை வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெற்றார். லால்குடி ஜெயராமன் தனது 12 வது வயதில் ஒரு பக்க வாத்தியக்காரராக தனது இசைப் பயணத்தை தொடங்கினார். அவர் பல இசை மேதைகளுக்கு பக்கவாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்தார். வயலின் வாசிப்பில் ‘லால்குடி பாணி’ எனும் முறையை ஏற்படுத்தினார். அவரது வயலின் வாசிப்பு பாடுவது போலவே இருக்கும் என்று இசை விமர்சகர்கள் கூறுவார்கள். அனைத்துவித இசைக்கருவிகளின் தனித் தன்மைகளையும் நன்கு உணர்ந்திருந்தார்.

தனது 70 ஆண்டு கால இசை வாழ்க்கையில் ஒரு வயலின் கலைஞராக மட்டுமல்லாமால் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்த அவர் பல வர்ணங்கள், பாடல்கள், தில்லானாக்களை இயற்றியுள்ளார். தனி வாசிப்பு, பக்கவாத்தியம் என்பதற்கு அப்பாற்பட்டு வயலின், வீணை, புல்லங்குழல் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கும் வீனா – வேணு – வயலின் எனும் ஒரு புதிய கச்சேரி வகையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

எடின்பரோ நகரில் நடைபெற்ற ஓர் இசை விழாவில் லால்குடி ஜெயராமன் வயலின் வாசிப்பை மிகவும் வியந்து புகழ்ந்த பிரபல மேற்கத்திய வயலின் கலைஞர் யஹூதி மெனுயின் தனது இத்தாலிய வயலினை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். லால்குடியின் பிரபலமான தில்லானாக்களுக்கு முன்னணி நடன கலைஞர்கள் பலரும் முத்திரை பதிக்கும் அபிநயங்களை விரும்பி வழங்கி நடனக் கச்சேரிகள் செய்துள்ளனர். நாகஸ்வர இசைக் கலைஞர்கள் பலரும்கூட லால்குடியின் தில்லானாக்களை விரும்பி இசைத்துள்ளனர். லால்குடி ஜெயராமனை ‘தில்லானா சக்ரவர்த்தி’ என்றும் அழைத்தனர்.

பாரத அரசின் பத்மவிபூஷன் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் கௌரவ டாக்டர் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். லால்குடி ஜெயராமன் இசை அமைத்த ஒரே தமிழ்த் திரைப்படமான சிருங்காரம் படத்திற்கு தேசிய விருது பெற்றார். இசையுலகில் பல்வேறு பெருமைக்குரிய லால்குடி ஜெயராமன் 2013 ஏப்ரல் 22ல் காலமானார்.